புதுடெல்லி,
முஸ்லிம் பெண்களை தலாக் முறையில் இருந்து காக்கும் முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
முத்தலாக் தடை மசோதா ஏற்கெனவே மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டபோது, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் திமுக, உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.,
கடந்த 16-வது மக்களவையில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும் மாநிலங்களவையில் ஆளும் பாஜக அரசுக்கு போதுமான பலம் இல்லாததால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் 16-வது மக்களவை காலம் முடிந்ததையடுத்து, இந்த மசோதா காலாவதியானது. இருப்பினும் முத்தலாக் தடைச் சட்டத்துக்கு போடப்பட்ட அவசரச் சட்டம் நீட்டிக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும் முதல் கட்டமாக மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று மசோதா விவாதத்துக்கு வருவதால், அனைத்து பாஜக எம்.பி.க்களும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். ஆதலால், இந்த மசோதா மீது இன்று காரசார விவாதம் நடந்தாலும் இந்த மசோதாவை நிறைவேற்றும் எண்ணத்துடன் மத்திய அரசு இருக்கிறது.
இந்த முத்தலாக் தடைச் சட்ட மசோதாவின்படி, பெண்களை தலாக் செய்யும் முஸ்லிம் ஆண்களுக்கு சிறை தண்டனை அளிக்கும் அம்சத்தை வைத்திருந்தது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால், மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால், குரல் வாக்கெடுப்பின் மூலம் மத்திய அரசு முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றியது. இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ