இந்தியா

டெல்லியில் மெய்நிகர் நீதிமன்றம் தொடக்கம்: போக்குவரத்து விதிகளை மீறுவோர் வீட்டிலிருந்தே வழக்கை முடிக்கலாம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

போக்குவரத்து விதிகளை மீறி சிக்கிக் கொள்வோர் தங்கள் வீட்டிலிருந்தபடியே அபராதம் செலுத்தி தங்கள் மீதான வழக்கை முடித்துக் கொள்ளும் வகையில் மெய்நிகர் நீதிமன்றம் (virtual court) டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற துறைகளைப் போலவே நீதிமன்றப் பணிகளும் கணினிமய மாகி வருகிறது. வீடியோ கான்பரன் சிங் வசதி மூலம் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி காவல் நீட்டிப்பது, ஜாமீன் வழங்குதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக டெல்லி யில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் வசதிக்காக மெய்நிகர் நீதிமன்றம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இந்த வசதியை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி.லோக்கூர் சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இந்த வசதி டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற அதிகாரி ருச்சி அகர்வால் அஸ்ரானி மேற்பார்வையில் இயங்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மொபைல், இ-மெயிலில் சம்மன்

போக்குவரத்து விதிகளை மீறு வோர் மீது டெல்லி போக்குவரத்து போலீஸார் மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்குகளை பதிவு செய்வார்கள். அதற்கான விதிமீறல் ரசீது எடுக்கப்பட்டு, அவை மெய்நிகர் நீதிமன்றத்துக்கு (virtual court) டிஜிட்டல் வடிவில் அனுப்பி வைக்கப்படும். விதிமீறியோர் பட்டி யலில் மெய்நிகர் நீதிமன்ற இணைய பக்கத்தில் பட்டியலாக வெளியாகும். அதன் அடிப்படை யில், அந்த நீதிமன்றத்தில் இருந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு மொபைல் எண் மற்றும் இ-மெயில் மூலம் சம்மன் அனுப்பி வைக்கப்படும்.

இந்த சம்மனுடன் மெய்நிகர் நீதிமன்ற பக்கத்திற்கான இணைப்பும் இருக்கும். விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அபராதத் தொகை செலுத்தலாம் அல்லது வழக்கை நடத்தலாம். அபராதத்தை செலுத்த விரும்பும் வாகன ஓட்டிகள் சம்மனில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தினால், மெய்நிகர் நீதிமன்ற இணைய பக்கத்திற்குச் செல்லும். அங்குள்ள தங்கள் பெயருள்ள விதிமீறல் ரசீதை தேர்வு செய்து வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அபராதம் செலுத்தலாம். அபராதம் வசூலிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கிரெடிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் வசதி மூலம் அபராதம் செலுத்தினால், உடனே அதற்கான ரசீது அவர்களது மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் போக்குவரத்து விதிமீறல் வழக்கு முடித்து வைக்கப்படும்.

போலீஸாரையும், நீதிமன்றத் தையும் நேரில் பார்க்காமலேயே அபராதம் செலுத்தி வழக்கை முடித்துக் கொள்ளும் இந்த வசதிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் சென்னை உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- எம்.சண்முகம்

SCROLL FOR NEXT