புதுடெல்லி
மதுரையை சர்வதேச விமான நிலையமாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) எம்.பி.யான சு.வெங்கடேசன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி சர்வதேச விமான நிலையத்தை விட மதுரையில் பயணித்தவர்கள் அதிகம் எனப் புள்ளிவிவரமும் அளித்தார்.
இது குறித்து மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் சிபிஎம் கட்சியின் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் மொத்த எண்ணிக்கை இருபது. அதில் 9 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பயணித்த சர்வதேசப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையை விட மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணித்த சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் மதுரை சர்வதேச விமான நிலையம் இல்லை. இது நியாயமா?
பிரதமரின் தொகுதியான உ.பி.யின் வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 1,24,950. இதை விட இருமடங்காக, மதுரை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பயணித்த சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கை 2,54,163. வாரணாசியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம், மதுரையில் இல்லையா?
திருப்பதி, போர்ட் பிளேயர், இம்பால், விஜயவாடா ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் இருந்தும் கடந்த ஆண்டு சர்வதேசப் பயணிகள் ஒருவர் கூட பயணிக்கவில்லை. ஆனால் இவை நான்கும் சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன. இந்த அந்தஸ்து, இரண்டரை லட்சம் மக்கள் பயணித்த மதுரை விமான நிலையத்திற்கு இல்லை.
மதுரை, மற்றும் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக அடிப்படையானது. இது, ஏழு மக்களவைத் தொகுதிவாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயங்குவதாக மாற்றுங்கள். சர்வதேச விமான நிலையமாக அறிவியுங்கள்.
BASA ஒப்பந்தத்தில் மதுரையை இணைத்து சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளின் குடியரசுடனான போக்குவரத்துக்கும் வழிசெய்யுங்கள்''.
இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.
ஆர்.ஷபிமுன்னா