இந்தியா

கஃபே காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா மாயம்: மங்களூரு போலீஸார் தீவிர தேடுதல்

செய்திப்பிரிவு

கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த அரசியல்வாதியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் கஃபே காஃபி டே என்ற பிரபல காபி நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி. சித்தார்த்தாவை திங்கள் கிழமை மாலை முதல் காணவில்லை.

மங்களூருவில் நேத்ராவதி ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தில் மாயமான அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில், "திங்கள் கிழமையன்று சித்தார்த்தா தனது காரில் பெங்களூருவில் இருந்து சகலேஸ்புராவுக்கு புறப்பட்டுள்ளார். ஆனால், பாதி வழியிலேயே ஓட்டுநரிடம் மங்களூரு செல்லுமாறு கூறியிருக்கிறார். பின்னர் அங்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு உல்லல் எனும் பகுதிக்கு செல்லச் சொல்லியிருக்கிறார். அங்கே நேத்ராவதி நதியருகே மாலை 6.30 மணியளவில் வாகனத்தை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். பாலத்தில் சிறிது நேரம் நடந்து செல்ல விரும்புவதாகக் கூறி ஓட்டுநரை அங்கேயே நிற்குமாறு சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். நிறைய தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால் 1 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் சித்தார்த் திரும்பாததால், ஓட்டுநர் சித்தார்த்தின் எண்ணுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். சித்தார்த்தின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என்று தகவல் சொல்ல அவரை பாலம் முழுவதும் ஓட்டுநர் தேடியிருக்கிறார். அதற்குள் மழையும் பெய்யத் தொடங்கியிருக்கிறது. சூழ்நிலைகளை வைத்து சித்தார்த் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டில் கூறியதாவது:
சித்தார்த் மாயமான விவகாரத்தில் எந்த ஒரு கோணத்தையும் நாங்கள் விட்டுவைக்க விரும்பவில்லை. மோப்ப நாயைப் பயன்படுத்தியபோது, நாய் பாலத்தின் பாதி வழியிலேயே நின்றுவிட்டது. அதனால், உள்ளூர் மீனவர்களையும் படகு சேவையையும் பயன்படுத்தி நேத்ராவதி ஆற்றில் சடலத்தைத் தேடி வருகிறோம். கடைசியாக அவர் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டார் என்பதையும் செல்போன் பதிவுகளை வைத்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவும் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.

சித்தார்த்தாவின் பால்ய நண்பர்களும் தொழில் பங்குதாரர்களுமான ஹல்லப்பா கவுடா, முகமது ஆகியோர் மங்களூரூவுக்கு வந்துள்ளனர். இவர்கள் சிக்மகளூரில் உள்ள காபி தோட்டத்தைக் கவனித்து வருகின்றனர். சித்தார்த் மாயமான விஷயம் தங்களுக்கு திங்கள் இரவு 10 மணிக்கே தெரியும் என்று கூறியுள்ளனர்.

சித்தார்த் மாயமான இடத்திலிருந்து முகத்துவாரம் வெறும் 3 கி.மீ. தொலைவிலேயே இருக்கிறது. அங்குதான் நேத்ராவதி ஆறு கடலில் கலக்கிறது.

SCROLL FOR NEXT