சண்டிகர்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான நபராக இருப்பார் என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வென்று, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது.
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பொறுப்பேற்று கடந்த மாதம் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால், செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.
ஆனால், ராகுல் காந்தி தலைவராக இருக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ராகுல் காந்தியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும், அவர் தனது முடிவை மாற்றாமல் இருநது வருகிறார்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறுகையில், ‘‘காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பிறகு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனது கருத்தை ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.
நாட்டில் பெரும்பாலானோர் இளைஞர்களாகவே உள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சிக்கும் இளந்தலைவர் ஒருவர் தான் தேவை. என்னைப் பொறுத்தவரை பிரியங்கா காந்தி வதேரா தலைவர் பதவிக்கு சரியான நபராக இருப்பார். அவர் மீது மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது.
ராகுல் காந்தி தலைவர் பதவியை தொடர்ந்து ஏற்காத நிலையில் அந்த இடத்துக்கு பிரியங்கா காந்தியே வர வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து தான். எனினும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியே இறுதி முடிவெடுக்கும்’’ எனக் கூறினார்.