பாக் - இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தை ஒன்று பலியான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸார் தரப்பில், “காஷ்மீரில் உள்ள புன்ஞ் மாவட்டத்தின் ஷாபூர், மெந்தர் ஆகிய எல்லைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்தத் தாக்குதல் இரவு 10 மணி வரை நீடித்தது. இந்தத் தாக்குதலில் பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்தது. மேலும் அக்குழந்தையின் தாயார் மற்றும் அண்டை வீட்டைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி வழங்கப்பட்டது. இன்றும் (திங்கட்கிழமை) பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 22-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.