மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு | கோப்புப் படம். 
இந்தியா

40 ஆண்டுகள் நட்பு: ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் விட்ட வெங்கய்ய நாயுடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி மறைவு குறித்து மாநிலங்களவையில் இரங்கல் தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான ஜெய்பால் ரெட்டி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஆந்திரப் பிரதேச மேலவைக்கு ஜெய்பால் இருமுறையும், 1997 முதல் 2014-ம் ஆண்டுவரை மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளிலும் இருந்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவரும்  மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவும், ஜெய்பால் ரெட்டியும் நெருங்கிய நண்பர்கள். ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

மாநிலங்களவை இன்று கூடியதும் மறைந்த ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வாசித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்த நாடு மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியையும், அற்புதமான பேச்சாளரையும், நிர்வாகியையும் இழந்துவிட்டது. ஜெய்பால் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் இருமுறை மேலவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 

எனக்கும் ஜெய்பால் ரெட்டிக்கும், 40 ஆண்டுகள் நட்பு (இதைக் கூறும்போது குரல் தளர்ந்தது). நானும், ஜெய்பால் ரெட்டியும் ஆந்திர சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்திருந்தோம். எனக்கு சிறந்த நண்பர், என்னைவிட வயதில் மூத்தவர், அரசியலிலும் என்னைக் காட்டிலும் மூத்தவர். 

ஆந்திர சட்டப்பேரவை முன்பு காலை 8 மணிக்குத் தொடங்கிவிடும். நானும், ஜெய்பால் ரெட்டியும், காலை 7 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்து இருவரும் ஒன்றாகத்தான் காலை சிற்றுண்டி சாப்பிடுவோம். பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்போம். அவரின் ஆழ்ந்த அறிவு, புரிந்துகொள்ளும் தன்மை, மொழிப்புலமை, ஆங்கிலம், உருது, தெலுங்கு ஆகியவற்றில் சிறப்பாகப் பேசக்கூடியவராக இருந்தது அற்புதமானது. அவர் இல்லாத சூழல் எனக்கு மிகுந்த வேதனை தருகிறது. (எனக் கூறி கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார்)

40 ஆண்டுகால நட்பை இழந்ததால் என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள் " எனத் தெரிவித்தார்.

அதன்பின் இந்தோனேசியா குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோமுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குத்துச்சண்டையில் 7 தங்கம் உள்ளிட்ட 9 பதக்கங்களை வென்ற இந்திய அணிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 
 

பிடிஐ

SCROLL FOR NEXT