புதுடெல்லி
உபி எம்எல்ஏவால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் சென்ற கார் விபத்துக்குள்ளானது தற்செயல் அல்ல என்று காங்கிரஸ் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச எம்எல்ஏவால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இளம்பெண் உறவினர்களுடன் ரேபெரேலி மாவட்டச் சிறையில் உள்ள தங்களது உறவினரைக் காண்பதற்காக நேற்றிரவு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (திங்கள்கிழமை) நள்ளிரவு 1 மணியளவில் அவர்கள் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உ.பி எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்திருந்த உன்னாவோ பெண் படுகாயம் அடைந்தார். அவருடன் வந்த உறவுக்காரப் பெண்கள் இருவர் பலியாகினர். வழக்கறிஞரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
''உன்னாவோ பலாத்காரத் தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் வாகனம் விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை எந்த அளவில் உள்ளது? குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ இன்னும் பதவியில் தொடர்கிறார், பாஜகவில் ஏன் இருக்கிறார்? பாதிக்கப்பட்டவருக்கும் அவரது சாட்சிகளுக்கும் அளிக்கப்பட்ட பாதுகாப்பில் இவ்வளவு மெத்தனம் ஏன்? இந்த கேள்விகளுக்கு ஒரு பதில்கூட இல்லாத பாஜக அரசிடமிருந்து எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியுமா?''
இவ்வாறு பிரியங்கா ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாதிக்கப்பட்டவரை கொல்ல சதி
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா, ''நடந்துள்ள விபத்து பாதிக்கப்பட்டவரை கொல்வதற்கான சதியே'' என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உன்னாவோவும் உத்தரப்பிரதேசமும் பாலியல் தாக்குதலால் உள்ளாக்கப்பட்ட மகளுக்கு நீதி கோருகின்றன. ஆனால் நீதிக்கு பதிலாக, நடந்தது என்னவோ கொலை செய்வதற்கான சதித்திட்டம் தான்.
அவரது தந்தை போலீஸ் காவலில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் தனது குடும்பத்தையும் இழந்துவிட்டார், மேலும் தனது உயிரைக் காத்துக்கொள்ள தானே போராட வேண்டிய நிலைமையில் அப்பெண் உள்ளார். ஆதித்யநாத் ஜீ! இதில் எங்களுக்கு நீதி கிடைக்குமா" என்று சுர்ஜேவாலா பதிவிட்டுள்ளார்.
- பிடிஐ