இந்தியா

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தகவல்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் விரைவில் பாஜக ஆட்சி மலரும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடந்தது. இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அல்லது அதைவிட கூடுதலாக ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது.

இதனிடையே, கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதற்கு பாஜகவின் சதிதான் காரணம் என காங்கிரஸ் மற்றும் மஜதவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சரும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் அங்கு பாஜக அரசு அமைத்துள்ளது. இதுபோல, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் அக்கட்சியிலிருந்து விலக விரும்புவதாக நான் கருதுகிறேன். இதனால் இந்த 3 மாநிலங்களிலும் விரைவில் பாஜக ஆட்சி அமை யும்.

சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் 99.99 சதவீதம் நம்பிக்கை வைத்திருப்பதைத்தான் இது காட்டுகிறது.

இவ்வாறு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

SCROLL FOR NEXT