சாலை வசதியின்மையை சுட்டிக் காட்டி பொதுப் பணித் துறை பொறியாளர் அலுவலக வாசலில் அமர்ந்து மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கீதா கோபி தர்ணாவில் ஈடுபட, அவர் அமர்ந்த இடத்தில் பசுஞ்சாணம் கலந்த நீரைத் தெளித்த கேரள இளைஞர் காங்கிரஸாருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கேரள மாநில திருச்சூரில் செரப்பு எனும் பகுதியில் சாலை வசதி குறைபாடு நிலவுவதாகக் கூறி எம்.எல்.ஏ.,கீதா கோபி தர்ணாவில் ஈடுபட்டார். பொதுப் பணித் துறை பொறியாளர் அலுவலக வாசலில் அமர்ந்து மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கீதா கோபி தர்ணாவில் ஈடுபட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் காங்கிரஸார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., கீதா கோபி இப்படியான கவன ஈர்ப்புப் போராட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருவதாகக் கூறி பேரணி ஒன்றை நடத்தினர். பின்னர் அவர் போராட்டம் நடத்திய இடத்துக்குச் சென்று அங்கு பசுஞ்சாணம் கலந்த நீரைத் தெளித்து சுத்தம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சடங்கு சாதி ரீதியாக தன்னை காயப்படுத்தியதாக எம்.எல்.ஏ., கீதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தான் அமர்ந்த இடத்தை சுத்தம் செய்து புனிதத்தை மீட்க பசுஞ்சாண நீரை அடையாளமாகத் தெளித்துள்ளனர் என்று கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரள கலாச்சார அமைச்சர் ஏ.கே.பாலனும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். இத்தகைய சடங்குகளை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார்.
கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா, கேரள இளைஞர் காங்கிரஸாரின் இந்த நடவடிக்கை அவர்களின் அரசியல் கலாச்சாரமின்மையையே காட்டுகிறது. கீதாவுக்கு எதிரான சாதிய பாகுபாடு ஒரு குற்ற நடவடிக்கை மட்டுமல்ல வன்மையாக கண்டிக்கத்தக்கதும்கூட.
சமூக நீதியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வரும் கேரளாவில் இது போன்ற சம்பவங்கள் நிச்சயம் அரங்கேறவேக் கூடாது. இது மீண்டும் தீண்டாமை கொடுமையை நினைவுப்படுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.
கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர், டீன் குரியகோஸ் கூறும்போது, "திரிச்சூர் மாவட்ட பொதுச் செயலாளருக்கு இது குறித்து தகவல் கொடுத்திருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விளக்கம் பெற கோரியிருக்கிறேன். ஒருவேளை தலித் வெறுப்பு சம்பவமாக இருந்தால் நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.