கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று வந்த முதல்வர் பிஎஸ் எடியூரப்பா : படம் ஏஎன்ஐ 
இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் எடியூரப்பா: வெற்றி பெறுவோம் என பாஜக நம்பிக்கை 

செய்திப்பிரிவு

பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றுள்ள பி.எஸ்.எடியூரப்பா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதில் வெற்றி பெற அதிகமான வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது

பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் பாஜகவிடம் இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெல்வது உறுதி என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

கர்நாடகத்தில் 14 மாதங்கள் ஆட்சி செய்த காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்த அந்தக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்தனர். அரசுக்கு அளித்த ஆதரவையும், அமைச்சர் பதவியையும் சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் ராஜினாமா செய்தனர். 

இதைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி நடந்த  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்து காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து எடியூரப்பா ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். 

இதற்கிடையே சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரைத் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் ரமேஷ் குமார், நேற்று காங்கிரஸ், ஜேடிஎஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்தார். இந்த 17 எம்எல்ஏக்களும் 2023-ம் ஆண்டுவரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், 225 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடகச் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 208 ஆக குறைந்துள்ளது. இதில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ மகேஷ் இன்று சட்டப்பேரவைக்கு வரமாட்டார் எனத் தெரிகிறது. மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ நாகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இரு வாரங்களாக மருத்துவமனையில் இருக்கிறார். இதனால் அவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 206 ஆகக் குறைந்துள்ளது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது அவையில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே கணக்கில் எடுத்து நடத்தப்படும் என்பதால், 206 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே போதுமானது. ஆனால், பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதுவரை சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் பாஜகவுக்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 106 ஆக பாஜகவுக்கு ஆதரவு அதிகரிக்கும் என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெல்வதில் சந்தேகம் இல்லை. 

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.மதுசூதனா நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் கட்சியின் 105 உறுப்பினர்களும் இன்று காலை 11 மணிக்குள் சட்டப்பேரவைக்கு வர வேண்டும் எனக் கோரி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். 225 எம்எல்ஏக்களில் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 208 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 105 உறுப்பினர்கள் தேவை. அது பாஜகவிடம் இருக்கிறது. இதுதவிர சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் கடந்த 23-ம் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆளுநரிடம் குமாரசாமிக்கு அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதாக கடிதம் அளித்துவிட்டார். 

முதல்வர் எடியூரப்பா இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை விவாதமின்றி கோருவார். அதில் வெற்றி பெற்றவுடன், நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். 

கடந்த ஆண்டு மே மாதம் 19-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்குத் தேவையான 113 எம்எல்ஏக்களில் 9 பேர் இல்லாமல் எங்களுடைய கட்சி ஆட்சியை இழந்தது. முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார். அப்போதும் நாங்கள் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாகத்தான் இருந்தோம், இப்போதும் இருக்கிறோம். ஆதலால், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெல்வதில் சந்தேகமில்லை" என மதுசூதனா தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT