ஸ்ரீநகர்
அரசியலமைப்பின் 35ஏ சட்டப்பிரிவில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்றதாகும் என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீநகரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் 20வது எழுச்சி தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு கட்சியின் தலைவரும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா பேசியதாவது:
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நிரந்தர மக்களுக்கென்று சிறப்பு உரிமைகளையும் சலுகைகளையும் 35ஏ சட்டப்பிரிவு நமக்கு வழங்குகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த 35ஏ சட்டப்பிரிவை பாதுகாக்க நமது கட்சித தொண்டர்கள் ஒரு பெரிய போராட்டத்திற்கு தயாராக இருக்கவேண்டும்.
அரசியலமைப்பின் 35ஏ சட்டப்பிரிவில் கைவைத்து அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்றதாகும் என்பதை நாம் மத்திய அரசுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
மாநிலத்தின் சிறப்புத் தகுதியை நீக்கும்வகையில் செய்யப்படும் எந்தவொரு முயற்சியையும் தடுத்து நிறுத்துவோம். இதற்காக நாங்கள் சாகும்வரை போராடத் தயாராக இருக்கிறோம். இதனால் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு இடையூறுகள் வரக் கூடும். ஏனெனில் மாநில சிறப்புத் தகுதி மற்றும் அடையாளத்திற்காக ஒரு மதில்சுவரைப்போல போல உறுதியாக நிற்கும் ஒரே கட்சி மக்கள் ஜனநாயகக் கட்சிதான் என்பதும் மத்திய அரசுக்குத் தெரியும்.
இவ்வாறு மெஹ்பூபா முப்தி பேசினார்.
- பிடிஐ