ஹரியாணாவின் ரோஹ்டாக் நகரில் நேற்று பாஜக கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஜே.பி. நட்டா பேசும்போது, “கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். தற்போது கட்சியில் 11 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
விரைவில் 20 கோடி உறுப்பினர்களை சேர்க்க கட்சி மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மற்ற கட்சிகள் நாட்டுக்கு சேவையாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக பதவியேற்று 50 நாட்களைக் கடந்துள்ளது. இந்த 50 நாட்களில் அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் மைல் கல்லாக உள்ளன.
இன்று நாம் உலகின் மிகப்பெரிய கட்சியாக இருக்கிறோம். நாம் யாருக்கு எதிராகவும் போட்டியிடவில்லை. நமது சாதனையை நாமே உடைக்க முயற்சி செய்கிறோம். தற்போது 11 கோடி பேராக இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையை 20 கோடியாக உயர்த்துவோம். பிரதமர் மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து மிக உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். ஜனநாயக மரபுகளைக் காக்கும் ஒரே கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது” என்றார்.