குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஜெய்பால் ரெட்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சல் செலுத்திய காட்சி : படம் கே.வி.எஸ்.கிரி 
இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்; வெங்கய்ய நாயுடு நேரில் அஞ்சலி

செய்திப்பிரிவு


ஹைதராபாத்,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ப்பால் ரெட்டி மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெய்பால் ரெட்டி உடல் வைக்கப்பட்டுள்ள ஹைதராபாத் இல்லத்துக்கு நேரில் சென்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

77 வயதான ஜெய்பால் ரெட்டி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கச்சிபவுலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1.30 மணிஅளவில் ஜெய்பால் ரெட்டி காலமானார். 

ஜெய்பால் ரெட்டிக்கு லட்சுமி எனும் மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

பல்வேறு அரசுகளில் ஜெய்பால் ரெட்டி முக்கிய அமைச்சர் பதவி வகித்துள்ளார். 4 முறை எம்எல்ஏவாகவும், மக்களவை எம்.பி.யாக 5 முறையும், மாநிலங்களவை எம்.பியாக 2 முறையும் ஜெய்பால் ரெட்டி இருந்தார். 

பிரதமர் மோடி ட்விட்ரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், " மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி சிறந்த நிர்வாகி, ஏராளமான ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்தவர். சிறந்த பேச்சாளராகவும், அற்புதமான நிர்வாகியாகவும் ஜெய்பால் ரெட்டி மதிக்கப்பட்டார். அவரின் மறைவு செய்து கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் " காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி மறைந்த செய்தி கேட்டு நான் மிகுந்த வருத்தமடைந்தேன். மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், தெலங்கானா மாநிலத்தின் மூத்த மகன், அவரின் வாழ்க்கையின் பெரும்பகுதியை மக்களுக்காக அர்ப்பணித்தார். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய வருத்தங்களை தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் ஜெய்பால் ரெட்டி உடலுக்கு நேரில் சென்று குடியரது துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் கூறுகையில் " கடந்த 40 ஆண்டுகளாக எனக்கு மிகநெருங்கிய நண்பர் ஜெய்பால் ரெட்டி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்து மக்கள் பணியாற்றினோம். மிகச்சிறந்த பேச்சாளர், கடந்த 1998-ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக விருது பெற்றவர் ஜெய்பால் ரெட்டி. மிகக்கூர்மையான அறிவாளியாகவும், கட்சியின் வலிமையான சக்திவாய்ந்த செய்தித்தொடர்பாளராகவும் ஜெய்பால் ரெட்டி திகழ்ந்தார். 

ஜனநாயகத்தின் மதிப்புமிக்க அம்சங்களை போற்றக்கூடியவர், அதை இறுகப்பற்றி செயலாற்றியவர். சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் மக்களின் முன்னேற்றத்துக்காக அவரின் காலம் முழுவதும் பேசியுள்ளார் " எனத் தெரிவித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், " காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி மரணச் செய்திகேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். ஜெய்பால் ரெட்டி பேசும், எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஆழ்ந்த அர்த்தம் இருக்கும், உணர்ச்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது " எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

SCROLL FOR NEXT