முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி : கோப்புப்படம் 
இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்,

காங்கி்ரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 77

77 வயதான ஜெய்பால் ரெட்டி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கச்சிபவுலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சையில்இருந்து வந்தநிலையில், சிகிக்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1.30 மணிஅளவில் ஜெய்பால் ரெட்டி காலமானார். 

ஜெய்பால் ரெட்டிக்கு லட்சுமி எனும் மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

பல்வேறு அரசுகளில் ஜெய்பால் ரெட்டி முக்கிய அமைச்சர் பதவி வகித்துள்ளார். 4 முறை எம்எல்ஏவாகவும், மக்களவை எம்.பி.யாக 5 முறையும், மாநிலங்களவை எம்.பியாக 2 முறையும் ஜெய்பால் ரெட்டி இருந்தார். 

முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றி ஜெய்பால் ரெட்டி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு  கூட்டணி அரசில், பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் நகர மேம்பாட்டு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராகவும், 2-வது முறையாக பதவியில் இருந்த காங்கிரஸ் அரசில் நகரமேம்பாட்டு அமைச்சராகவும், பின்னர் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சராகவும் ஜெய்பால் ரெட்டி இருந்தார்.

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் சந்தூர் மண்டலா கிராமத்தில் ஜெய்பால் ரெட்டி 1942-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிறந்தார். ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலையில் எம்.ஏ.பட்டம் பயின்ற ரெட்டி, விவசாயம் செய்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெய்பால் ரெட்டி, எமர்ஜென்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன்பின் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்பால் ரெட்டி இருந்தார்

கடந்த 2012-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயு எடுத்ததில் பல்வேறு முறைகேடுகளை செய்தது எனக் கண்டுபிடித்து ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்தவர் ஜெய்பால் ரெட்டி. இந்த அபராதத்துக்கு அப்போது எதிர்க்கட்சிகளாக இருந்த பாஜக, சமாஜ்வாதி ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த அபராதம் திரும்பப் பெறப்பட்டு ஜெய்பால் ரெட்டியும் வேறு அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறைந்த ஜெய்பால் ரெட்டியின் இறுதிச்சடங்குகள் நாளை நடக்கின்றன என்று காங்கிரஸ் எம்.பி. வெங்கட் ரெட்டி தெரிவித்தார். 

வெங்கட் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், " ஜெய்பால் ரெட்டியின் இறுதிச் சடங்கு நடத்தும் இடத்தை தெலங்கானா அரசு ஒதுக்கித் தர வேண்டும். அவரின் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்துக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்பதை முதல்வர் சந்திரசேகர் ராவ் கவனிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். " எனத் தெரிவித்தார்.

ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டரில் விடுத்த அறிக்கையில், " முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மறைவு கேட்டு வருத்தமடைந்தேன். சிறந்த அரசியல்சிந்தனைவாதி, எம்.பி,யாக இருந்தார். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
    
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட இரங்கல் செய்தியில் " ஜெய்பால் ரெட்டி மறைந்த இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மனவலிமையை இறைவன் கொடுக்க வேண்டும். ஜெய்பால் ரெட்டியின் திடீர் மறைவு மிகுந்த வேதனையையும், வலியையும் தருகிறது " எனத் தெரிவிக்கப்பட்டது.

பிடிஐ

SCROLL FOR NEXT