இந்தியா

வியாபம் ஊழல் விவகாரம்: ம.பி.யில் முழு அடைப்பு போராட்டம் - முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விலக காங். வலியுறுத்தல்

பிடிஐ

வியாபம் ஊழல் விவகாரத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேசத்தில் நேற்று மாநிலம் தழுவியமுழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

வியாபம் ஊழல் விவகாரத்தில் பல ஆயிரம் கோடி முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை 49 பேர் மர்மமாக உயிரிழந்துள்ளனர். இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேசத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

ரமலான் பண்டிகை சனிக் கிழமை கொண்டாடப்படுவதால் முஸ்லிம்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. தலைநகர் போபால் உட்பட பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

எவ்வித அசம்பாதவித சம்பவங்களும் நடைபெற வில்லை.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் போபாலில் உள்ள தனது வீட்டில் இருந்து தொண்டர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ரோஜா மலர்களை வழங்கினர்.

பின்னர் திக்விஜய் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊழல் விவகாரங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வரும் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களைக் காப்பாற்ற வேண்டியே இப்போது பேரணி நடத்தினோம். ஊழல் விவகாரத்துக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT