மும்பை
மும்பையில் வெள்ளத்தில் சிக்கி எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய 700 பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இங்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரவுமுழுவதும் அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
மும்பை சாந்தகுரூஸ் பகுதியில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை 24 மணிநேரத்தில் 21.9 செ.மீ. மழை பெய்துள்ளது. கொலாபாவில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது
மும்பையில் நேற்று முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
மும்பை அருகே பாதல்பூர் - வாங்கினி ரயில் நிலையத்துக்கு இடையே அந்த ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் சூழ்ந்தது. வெள்ள நீர் அந்த பகுதியை சூழ்ந்ததால் ரயிலை இயக்க முடியவில்லை.
அந்த ரயிலில் 700 பயணிகள் உள்ளனர். தண்டவாளத்தை தாண்டி தண்ணீர் ஓடுவதால் ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் சிக்கி ரயிலுக்குள் பல மணிநேரமாக பயணிகள் தவித்து வருகின்றனர். சில பயணிகள் ரயிலில் இருந்து குதித்து வெளியேற முற்பட்டனர்.
ஆனால் அவர்களை வெளியேற வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வெள்ள நீர் அதிகமாக இருப்பதால் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ளனர். அவர்களை மீட்பதற்காக படகுகள் மற்றம் மீட்பு பொருட்களுடன் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்தனர். அங்கு தற்போது மீட்பு பணிகள் தொடங்கியுள்ளது. ரயிலில் இருந்து பயணிகள் படகுகளில் ஏற்றப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றனர்.