சோபியான் மாவட்டம் மொஹல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிரத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி உள்பட இருவர் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவில் இருந்து மேற்கொண்ட கடும் தேடுதல் வேட்டை மற்றும் துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தான் ஆதரவு, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி உள்பட இருவரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்

இது குறித்து பாதுகாப்புப் படையினர் தரப்பில் கூறுகையில், "காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள பான்பஜார் பகுதியில் உள்ள பாண்டே மொஹல்லாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இந்தத் தகவலின் அடிப்படையில், நேற்று இரவு முதல் மொஹல்லா பகுதியி்ல் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். 

இதற்கு பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையை இரவுவரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி முன்னா லாஹிரி ஆவார். இவர் காஷ்மீரில் ஏராளமான மக்கள் கொல்லப்படுவதற்கு முன்னா லாஹிரி முக்கியக் காரணமாக இருந்தார். அவரின் உதவியாளரும் இந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். 

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி முன்னா லாஹிரியை, அப்பகுதியில் பிஹாரி என்றும் அழைக்கின்றனர். காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தீவிரவாத அமைப்பில் சேர்க்கும் பணியை லாஹிரி செய்து வந்தார். மேலும், அதிக சக்திவாய்ந்த ஐஇடி வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர் லாஹிரி. 

இருவரிடம் இருந்தும் இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஆயுதங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன" என போலீஸார் தெரிவித்தனர்.

பிடிஐ

SCROLL FOR NEXT