இந்தியா

25 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு

செய்திப்பிரிவு

நாட்டிலுள்ள விமான நிலையங்களில் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் குரு பிரசாத் மொகபத்ரா, செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 10 - 15 லட்சம் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்கள் பராமரிப்பை தனியார்மயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்தது.
முதற்கட்டமாக 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கடந்த ஆண்டு லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவாஹட்டி ஆகிய விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. 

அதன்படி, இந்த 6 விமான நிலையங்களில் அகமதாபாத், லக்னோ, மங்களூரு ஆகிய 3 விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றது.  இந்த மாதத் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியது.

ஜெய்ப்பூர், குவாஹாட்டி விமான நிலையங்களை பராமரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. திருவனந்தபுர விமான நிலைய பராமரிப்பை தனியாருக்கு அளிப்பதில் மட்டும் கேரள ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், மேலும்  20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெறும் தனியார் நிறுவனங்கள் 40% பணியாட்களை நியமித்துக் கொள்ளும் 60% பணியாட்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தால் நியமிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT