இந்தியா

உ.பி.யில் கிராம மக்களால் புலி அடித்துக்கொலை

செய்திப்பிரிவு

லக்னோ

உத்தரபிரதேச மாநிலத்தில் கிராம மக்களால் புலி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உ.பி. மாநிலம் பிலிப்பித் மாவட்டத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. புலிகள் காப்ப கத்தை ஒட்டிய வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை காலை மடேனா கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த குட்டு என்கிற இளைஞர் காப்பக பகுதிக்குள் புலி இருக்கும் இடத்துக்குச் சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த புலி அவரைத் தாக்க முனைந்துள்ளது. குட்டுவின் அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் கத்தி, ஈட்டியுடன் பாய்ந்து அந்த புலியைத் தாக்கி யுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த புலி அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவத்தை சிலர் செல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலால் படு காயமடைந்திருந்த புலி நேற்று முன்தினம் இறந்துவிட்டது. புலியின் உடலைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், கடும் அதிர்ச்சி காரணமாகவும், படுகாயம் காரணமாகவும் புலி இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை பிலிப்பித் மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவத்சவாவிடம் பிலிப்பித் புலிகள் காப்பகத்தின் மண்டல வனத்துறை அதிகாரி நவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார். புலியைத் தாக்கிய பொதுமக்களைத் தடுக்க முயன்ற வனத்துறை அதிகாரிகள், ஊழியர்களையும் அவர்கள் தாக்கியதாக கண்டேல்வால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பிலிப்பித் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாஜிஸ் திரேட் விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT