கர்நாடகாவில் ஜூலை 26ம் தேதி 4-வது முறையாக முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா வரும் 29-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறி உள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற ஏகப்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு குமாரசாமி தலைமை காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சி கவிழ்ந்தது.
இதனையடுத்து 105 இடங்களுடன் பாஜக தலைமை ஆட்சிக்காக எடியூரப்பா ஆட்சியமைக்கும் உரிமையை ஆளுநரிடம் கோரினார், இதனடிப்படையில் ஜூலை 26ம் தேதி அவர் மட்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் பதவியேற்ற பிறகு எடியூரப்பா செய்தியாளர்களைச் சந்தித்த போது ஜூலை 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திப்பேன் என்றார்.
“என்னுடைய முதல் முன்னுரிமை விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் வேளான் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே.
பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் படி மாநில அரசின் சார்பாக ரூ.2000 தொகையை இரு தவணைகளில் அளிக்க அமைச்சரவை முடிவெடுத்தது, அதன்படி பயனாளர்களுக்கு தொகை அளிக்கப்படும்.
அதே போல் மார்ச் 2019-ன் படி உள்ள நெசவாளர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும், இது சுமார் ரூ.100 கோடியாகும்” என்று கூறியதோடு, ஜூலை 29ம் தேதி சட்டப்பேரவையைக் காலை 10 மணியளவில் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் அதே தினத்தில் நிதிமசோதாவை நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.