மும்பையில் 2006-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற பராக் சாவந்த், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவமனையில் நேற்று மரணம் அடைந்தார்.
மும்பை புறநகர் ரயில் சேவையை முடக்கும் வகையில் கடந்த 2006, ஜூலை 11-ம் தேதி 11 நிமிடங்களில் 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் 188 பேர் உயிரிழந்தனர். 817 பேர் காயம் அடைந்தனர்.
தானே மாவட்ட எல்லைக்குட்பட்ட மும்பை புறநகர் பகுதியான பியாந்தர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சாவந்த்(36). சம்பவ நாளன்று வீடு திரும்புவதற்காக விரார் செல்லும் புறநகர் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். இந்நிலையில் மீரா ரோடு ரயில் நிலையத்தில் அவரது பெட்டியில் குண்டு வெடித்தது. தலையில் பலத்த காயத்துடன் சாவந்த், மீரா ரோடு பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மும்பையில் உள்ள பி.டி.ஹிந்துஜா மருத்துவமனையில் கடந்த 2006, ஜூலை 12-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் அவர் ஆழ்ந்த கோமாவில் இருந்தார். பிறகு அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, எளிய உத்தரவுகளை புரிந்துகொள்ளும் (semi conscious) நிலையை அடைந்தார்.
தலையில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட சாவந் துக்கு பல ஆண்டுகள் தொடர் சிகிச்சையும் உடலியக்க பயிற் சியும் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி சாவந்த் மரணம் அடைந்தார்.
சாவந்துக்கு ப்ரீத்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். சாவந்த் கோமா நிலையில் இருந்தபோது இவரது மகள் பிறந்தார். இவரது மனைவிக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கப்பட்டது. சாவந்த் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.