பிரியங்கா காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

10 லட்சம் பேருக்கு வேலையிழப்பு: மத்திய அரசு மவுனமாக இருப்பது ஆபத்து: பிரியங்கா காந்தி வேதனை 

செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ

ஆட்டோமொபைல் துறையில் 10 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக வந்துள்ள செய்தியைப் பார்த்தும் மத்தியில் ஆளும் அரசு மவுனமாகஇருப்பது ஆபத்தானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் தலைவர் ராம் வெங்கட்ராமன் சமீபத்தில் அளித்த பேட்டியில், " எங்கள் துறையில் நாடு முழுவதும் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். ஆனால், தற்போது வாகன உற்பத்தியும், விற்பனையும் சிக்கலான கட்டத்தில் இருக்கிறது.

அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே சீராக 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இல்லாவிட்டால், இப்போது இருக்கும் விற்பனையும் இன்னும் குறைந்துவிடும், உற்பத்தியும் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால், நாட்டில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித் துறையில் ஏறக்குறைய 10 லட்சம் தொழிலாளர்கள் விரைவில் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்திருந்தார்

இந்த செய்தி ஊடகங்களிலும், நாளேடுகளிலும் வெளியானது. இந்த செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,

" ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்தமான போக்கால் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைபறிபோகும் நிலை இருப்பது ஆபத்தான போக்காகும். இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் புதிய வேலையைப் பல்வேறு துறைகளில் தேடுவதற்குத் தயாராகி வருகிறார்கள். 

ஆனால், தொழிலாளர்கள் வேலையிழப்பு, பலவீனமான வர்த்தகம்,  மற்றும் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் கொள்கைகளைப் பார்த்து பாஜக அரசு மவுனமான இருப்பது ஆபத்தான போக்காகும்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT