பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

போலியான பொருட்கள் டெலிவரி: ஸ்நாப்டீல் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு 

செய்திப்பிரிவு

கோட்டா, பிடிஐ

போலியான பொருட்களை விற்பனை செய்தமைக்காக ஆன்-லைன் விற்பனை நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர்களான குனால் பாஹ், ரோஹித் பன்சால் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் புகாரையடுத்து, ஸ்நாப்டீல் உரிமையாளர்கள் குனால் பாஹ், ரோஹித் பன்சால் ஆகியோருக்கு எதிராக ஐபிசி 420 (மோசடி) பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், வர்த்தகருமான இந்தர்மோகன் சிங் ஹனி ஸ்நாப் டீல் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து உட்லாண்ட்ஸ் பெல்ட் மற்றும் வாலட் ஆகியவற்றை கடந்த 17-ம் தேதி ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். 

ஆனால், அந்த இரு பொருட்களும் இந்தர்மோகன் சிங்கிற்கு டெலிவரி செய்யப்பட்டப்பின்புதான் அது  உட்லேண்ட்ஸ் நிறுவனத்தின் உண்மையான பொருட்கள் அல்ல, போலியானது என்று தெரியவந்தது.

இதையடுத்து, கும்மன்புரா போலீஸ் நிலையத்தில் இந்தர்மோகன் சிங் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், தான் ஸ்நாப்டீல் நிறுவனத்திடம் இருந்து உட்லேண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பெல்ட் மற்றும் வாலட்டை விலை கொடுத்து வாங்கினேன்.

அந்த பொருட்கள் தனக்கு டெலிவரி செய்யப்பட்டபின் அந்த பொருட்களின் உண்மைத் தன்மை குறித்து தனக்கு சந்தேகம் எழுந்ததால், உட்லேண்ட்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூமுக்குச் சென்று அந்த பொருட்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தேன்.

அதில் நாங்கள் ஸ்நாப்டீல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய இரு பொருட்களும் போலியானவை என்பது தெரியவந்தது. அதனால், ஸ்நாப் டீல் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சிங் சிகர்வால் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களும் தலைமைநிர்வாக அதிகாரிகளான குணால் பாஹ், ரோஹித் பன்சால் ஆகியோர் மீது மோசடிவழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்நாப்டீல் உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து இந்தர்மோகன் சிங் கூறுகையில், " ஸ்நாப்டீல் நிறுவனத்திடம் இருந்து இதற்கு முன் வாங்கிய பொருட்களும் இதுபோல் மோசமான நிலையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கைக்கடிகாரம் ஆர்டர் செய்தும் அதை டெலிவரி செய்யவில்லை என்றும் ஆனால், தனக்கு வந்த எஸ்எம்எஸ்ஸில் பொருட்கள் வீ்ட்டில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் இருந்தது. அதன்பின் தான் புகார் அளித்து பணத்தை திரும்பப்பெற்றேன் " எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT