இந்தியா

முதல்வரான 2 மாதங்களில் மக்கள் நலத்திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தி ஆந்திராவின் எம்ஜிஆராக உருவெடுக்கும் ஜெகன்மோகன்

செய்திப்பிரிவு

என். மகேஷ்குமார்

அமராவதி 

ஆந்திராவின் புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு ஆந்திராவின் எம்ஜிஆராக உரு வெடுத்து வருவதாக அரசியல் நோக்கர் கள் கருதுகின்றனர்.

தென்னிந்தியாவின் பெரிய மாநில மாக விளங்கிய ஆந்திரா, இரண்டாக பிரிக் கப்பட்டு, 2014-ம் ஆண்டு தெலங் கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநில பிரிவினைக்குப் பிறகு இருமாநிலங் களிலும் காங்கிரஸ் கட்சி செல் வாக்கை இழந்தது. 2014 மக் களவைத் தேர்தலுடன் நடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் தெலங்கானா வில் டிஆர்எஸ் கட்சியும் ஆந் திராவில் தெலுங்கு தேசமும் ஆட்சியைப் பிடித்தன.

இந்நிலை யில், தெலங் கானாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் டிஆர்எஸ் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட் சியை தக்கவைத்துக் கொண்டது. இதேநிலை ஆந்திராவில் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கு தேசம் படுதோல்வி அடைந்தது.

ஆந்திராவில் பாஜவுடனான கூட்ட ணியை தெலுங்கு தேசம் முறித்து கொண்டபோது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மெல்ல காய் நகர்த்த தொடங்கியது. இக்கட்சி கிராம அளவில் இருந்து நகரம், மாநகரம் என அசுர வளர்ச்சி அடைந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு வழக்குகளை சந்தித்து வந்தாலும், அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வந்தது. அனுபவம் மிக்க சந்திரபாபு நாயுடுவை தைரியமாக எதிர் கொண்ட இவர், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டார். குறிப்பாக, பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியதை இவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அக்கட்சியுடன் நெருங்கினார்.

இவரது தந்தை மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த பி.சத்யநாராயணா, பில்லி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை தனது கட்சியில் இணைத்துக்கொண்டார். மேலும், நடிகை ரோஜா போன்ற நட்சத்திர பிரச்சாரகர் களை இவர் பயன்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், மாநில சிறப்பு அந் தஸ்து எனும் அஸ்திரத்தை கையில் எடுத்தார் ஜெகன். பாஜக தலைமை யிலான மத்திய அமைச்சரவையில் 4 ஆண்டுகள் வரை தெலுங்கு தேசம் இடம் பிடித்திருந்த போதும், ஆந்திரா வுக்கு சிறப்பு அந்தஸ்து பெற முடியவில்லை. இதை ஜெகன் சாதகமாக் கிக் கொண்டு, சந்திரபாபு நாயுடுவை பாஜக கூட்டணியில் இருந்து விலகச் செய்தார். இதுவே ஜெகனுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து அதே சிறப்பு அந்தஸ்துக்காக ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் பாத யாத்திரையை தொடங்கினார். கடப்பாவில் தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு பாத யாத்திரையை தொடங்கிய ஜெகன், சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று மக்களை நேரடியாக சந்தித்தார். அப்போது இவருக்கு மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஜெகன், விவசாயிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், மகளிர், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் என பலதரப்பட்டவர்களின் பிரச்சினை களை நேரில் கண்டறிந்தார்.

ஆனால், இவரது பாத யாத்திரையை உதாசீனப்படுத்திய தெலுங்கு தேசம் கட்சியினர், ஜெகன்மோகனை ஏளனமாக பேசினர். ஜெகன் பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்தபோதும், தன் மீதான வழக்கு விசாரணைக்காக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹைதராபாத் நீதி மன்றத்தில் தவறாமல் ஆஜரானார். இதை தெலுங்கு தேசம் கட்சினர் கிண்டலடித்தனர். ஆனால் இதையெல் லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. இதை நோக்கி ஜெகன் மெல்ல அரசியல் காய்களை நகர்த்தினார்.

தேர்தல் தேதி அறிவித்ததும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவித்தார் ஜெகன். நடிகர் பவன் கல்யாணின் ‘ஜனசேனா’ கட்சியும் இம்முறை களத்தில் இறங்கியது. இதனால் இளைஞர்களின் ஓட்டு பவனுக் குத்தான் என பரவலாக பேசப்பட்டது. நடிகர் என்பதால் அந்த வசீகரம் தனக்கு கை கொடுக்கும் என பவன் நம்பினார். ஆனால் இதையும் ஜெகன் தவிடு பொடி யாக்கினார். நடிகர் பவன் கல்யாண் இரு தொகுதிகளில் போட்டியிட்ட போதி லும் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. அவற்றில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி யின் வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

சாதி ஆதிக்கம் அதிகம் உள்ள தெலுங்கு மாநிலங்களில் காப்பு, கம்மா, ரெட்டி ஆகிய 3 சாதியினர், ஆந்திர அரசியல், சினிமா, வணிகம் ஆகிய 3 முக்கிய துறைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மற்ற சாதிகள், இனங்கள் இந்த சாதி கட்சியி னரை ஆதரித்தே ஆக வேண்டும் என்கிற நிலை இன்றும் மாறவில்லை. இதனால் நாயுடு பிரிவைச் சேர்ந்த காப்பு, கம்மா ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நடிகர் பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் வாக்குகள் சிதறின. இறுதியில் ரெட்டி வகுப்பைச் சேர்ந்த ஜெகன்மோகன் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றார். 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 151 தொகுதிகளைக் கைப்பற்றி, தான் மிக வும் பலமானவன் என்பதை எதிர்க்கட்சி யினருக்கு நிரூபித்தார். அதேநேரம் 25 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் வெற்றி பெற்றது இவரது கட்சி.

வெற்றி பெற்றாகி விட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை 5 ஆண்டுகளுக்கு மட்டு மின்றி தொடர்ந்து அடுத்த 5 ஆண்டு களுக்கும் நீடிக்கச் செய்ய வேண்டுமென ஜெகன் முடிவு செய்துள்ளார். இதனால் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த நவரத்தின திட்டத்தைச் செயல்படுத்த் தொடங்கி விட்டார். இதன்படி, விவசாயி கள், பெண்கள், வேலையில்லா இளைஞர்கள், முதியோர், அரசு ஊழியர் கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உட்பட 9 பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதை தான் முதல்வராக பதவியேற்ற நாள் (மே 30) முதலே அமல்படுத்தத் தொடங்கி விட்டார். ஆம். முதல் நாளிலேயே முதி யோருக்கான மாத உதவித் தொகையை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தினார். இதை ஆண்டுதோறும் ரூ.250 வீதம் உயர்த்தி 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

அடுத்தபடியாக விவசாயிகளுக்கு தினமும் காலையில் 9 மணி நேரம் இலவச மின்சாரம் விநியோகிக்கும் திட் டத்தை அமல்படுத்தினார். அரசு திட்டங் கள் முழுமையாக ஒவ்வொரு பயனாளி யையும் சென்றடையும் வகையில், கிரா மங்களில் ஒவ்வொரு 50 குடும்பத்துக்கும் ஒரு கிராம தன்னார்வலரை நியமனம் செய்தார். இவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப் படும் எனவும் அறிவித்தார். இதன் மூலம் வேலையில்லாத 4 லட்சம் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார். இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டத்தையும் அமல்படுத்தி உள் ளார். மேலும், ஏழைகளுக்கு ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில், உயர் தரமான அரிசியை வழங்கவும் ஜெகன் முடிவு செய்தார்.

மேலும், மணல் கொள்ளையைத் தடுக்க, வரும் 15-ம் தேதி முதல் முறைப் படி அனுமதி பெற்றவர்களுக்கு இலவச மாக மணல் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதன் மூலம், மணல் அள்ளும் நபர், கூலி ஆட்கள், சம்மந்தப்பட்ட வருவாய் அதிகாரி போன்ற அனைவரும் ஒவ்வொரு டிராக்டர் மணலுக் கும் கணக்கு காண்பிக்க வேண்டி உள்ளது. இவை அனைத்தும் ஆன்லைன் முறை என்ப தால் ஊழல் செய்ய முடியாது என கூறப்படுகிறது.

‘ஆஷா’ மருத்துவ திட்டத்தின் கீழ் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக ஜெகன் உயர்த்தினார். மேலும், தனியார் துறை வேலையில் ஆந்திர மக்களுக்கு 75 சதவீதம் முன் னுரிமை வழங்கப்படும் எனவும் ஜெகன் அறிவித்துள்ளார். இதற்கு இளைஞர் களிடையே நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது.

மேலும் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுடன் ஜெகன்மோகன் நட்பை வளர்த்து வருகிறார். இதன் மூலம் மின்சாரம், தண்ணீர், அரசு ஊழியர்கள் பிரிப்பு, போக்குவரத்து வரி உட்பட இரு மாநிலங்களுக்கிடையே நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதற் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. கடைநிலை ஊழியர்கள் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகா ரிகள் வரை யார் லஞ்சம் வாங்கினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெகன் அறிவித்துள்ளார்.

அடுத்தகட்டமாக பூரண மது விலக்கை அமல்படுத்துவோம் என ஜெகன் கூறியுள்ளார். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. போக்குவரத்துக் கழகத்தை அரசுத் துறையாக மாற்றவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பள்ளி, இண்டர்மீடியட் (பிளஸ்-1,2) படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ, மாணவி கள் மீண்டும் தங்களது படிப்பை தொடர வேண்டும் என்றும், இதற்காக பெற்றோருக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரூ.8 கோடி செலவில் கட்டிய ‘பிரஜா வேதிகா’ கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாக கிருஷ்ணா ஆற்றுப் படுகை மீது கட்டப்பட்டதாக கூறி, அதை ஒரே நாளில் இடித்துத் தள்ளினார். ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கை களையும், ஜனரஞ்சக திட்டங்களையும் அமல் படுத்தி ஆந்திராவின் எம்.ஜி.ஆர். என்றழைக்கும் அளவுக்கு ஜெகன் பெயர் எடுத்து வருகிறார். சில திட்டங்களை எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி யினரே பாராட்டும் வகையில் அமல்படுத்தி வருகிறார் இந்த ஜனரஞ்சக ஜெகன்.

SCROLL FOR NEXT