தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜரக்கிஹோலி, மகேஷ் குமதல்லி, ஆர்.சங்கர். | கோப்புப் படங்கள். 
இந்தியா

மூன்று எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கர்நாடகா சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜர்க்கிஹோலி மற்றும் மகேஷ் குமதல்லி ஆகியோரையும் சுயேச்சை எம்.எல்.ஏ. ஆர்.சங்கரையும் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இது கர்நாடக அரசியலில் இன்னொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது நடப்பு சட்டப்பேரவைக் காலம் 2023 வரை நீடிப்பதால் இது முடியும் வரை இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.  பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தகுதி நீக்க அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு 17 மனுக்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு குமாரசாமி தலைமை காங்கிரஸ்-மஜத ஆட்சிக் கவிழ்வதற்கு மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்கள் காரணமாக இருந்தனர். 

“அவர்கள் ராஜினாமா கடிதங்களை நான் நிராகரித்தேன். அவை வந்த விதம், இந்த ராஜினாமாக்கள் அவர்களால் முடிவெடுக்கப்பட்ட உண்மையான முடிவல்ல என்ற முடிவை நோக்கி என்னைத் தள்ளியது.  என்னிடம் இந்த எம்.எல்.ஏ.க்களை தண்டிக்க அதிகாரம் இல்லை” என்றார்.

இந்த மாதத்தில் 15 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இவர்களால் பெரும் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் கூட்டணி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்க்கப்பட்டது. 

சபாநாயகர் இவர்களின் ராஜினாமாவை ஏற்கவில்லை எனில் இவர்கள் எம்.எல்.ஏ.க்களாக இருப்பார்கள் சட்டப்பேரவை வலுவும் 225 இடங்களாக இருக்கும். இந்நிலையில் பெரும்பான்மையைத் தீர்மானிப்பது 113 இடங்களாகும்.  ஆனால் இன்று  3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 222 இடங்களாகக் குறைந்துள்ளது. இதனால் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்று ஆகியுள்ளது. 

105 இடங்களை வைத்துள்ள பாஜக மைனாரிட்டி அரசை அமைக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் ஜி.மதுசூதன் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் அங்கு ஆளுநருக்கு இருக்கும் ஒரு தெரிவு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதாகும்.

மீதமுள்ள 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை  ‘இன்னும் இரு நாட்களில்’ முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார். 

SCROLL FOR NEXT