இந்தியா

தீவிரவாதிகளின் செயல்பாடுகளை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்: நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதை அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு சென்ற இம்ரான் கான் அந்நாட்டு எம்.பி.க்களுடன் உரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில் ‘‘பாகிஸ்தானில் தற்போது இல்லை. இருப்பினும் 40 புதிய தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும் எங்கள் முந்தைய அரசுகள் சரியான தகவல்களை அமெரிக்காவிடம் பகிர்ந்து கொள்ளாததால் தீவிரவாத இயக்கங்களை அகற்ற முடியாமல் போனது. இப்போது அதனை உணர்ந்துள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா எங்களுக்கு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் இதுபற்றி கூறியதாவது:

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இருப்பதை அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது. அங்கு தொடர்ந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபடுகின்றன. தங்கள் நாட்டில் தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 
 

SCROLL FOR NEXT