இந்தியா

முத்தலாக் சட்டம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஆண் - பெண் சமத்துவம் பேண வேண்டும் என்பதற்காகவே முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இந்த சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

முத்தலாக் மசோதா கடந்த 16-வது மக்களவையின் போது தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு போதுமான பலம் இல்லாத காரணத்தால், அது நிறைவேற்றப்படவில்லை. இதனால், 16-வது மக்களவை முடிந்த நிலையில், அந்த  முத்தலாக் மசோதாவும் மாநிலங்களவையில் காலாவதியாகிவிட்டது.

இதைத்தொடர்ந்து முத்தலாக் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்த நிலையில், அதைச் சட்டமாக்கும் வகையில் முத்தலாக் மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. முஸ்லிம் பெண்களுக்கு உடனடியாக தலாக் கூறி அவர்களை ஒதுக்கி வைப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முத்தலாக்கைப் பின்பற்றும் கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கணவனைக் கைது செய்யும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் கணவன் கைது செய்யப்பட்டால், மாஜிஸ்திரேட் முன் மனைவி ஒப்புதலின் பெயரில் ஜாமீன் பெற முடியும்.

மக்களவையில் இந்த மசோதா மீதான விவாததில் பங்கேற்று பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் ‘‘கடந்த 2017-ம் ஆண்டில் 574 முத்தலாக் சம்பவங்கள் நடந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆண்- பெண் சமத்துவம் பேணப்பட வேண்டும், சம நீதி வழங்கப்பட வேண்டும் என்று இந்த அரசு விரும்புகிறது. எனவே தான் முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்’’ என்றார். 

ஆனால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என தெரிவித்தனர். 

SCROLL FOR NEXT