புதுடெல்லி | பிடிஐ
இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 8.5 மில்லியன் யூரோக்களை திரட்டியுள்ளது.
இதுகுறித்து மனிதாபிமான உதவி மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையர் கிறிஸ்டோஸ் ஸ்டைலானைட்ஸ் தெரிவித்ததாவது:
இந்தியா மற்றும் பங்களாதேஷில் தொடர்ந்து பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவித் தொகையாக 1.5 மில்லியன் யூரோ இந்த நிதிதொகுப்பிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இயற்கை பேரழிவுகள் மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ,8.5 யூரோ மில்லியன் அளவில் புதிய மனிதாபிமான நிதி தொகுப்பை திரட்டியுள்ளது.
தெற்காசியாவில் உள்ள நாடுகள் பெரிய அளவில் மோசமான பருவமழையை எதிர்கொள்கின்றன. இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பெய்து வரும் கடுமையானமழை மற்றும் வெள்ளம் ஒரு பெரிய அளவிலான மனிதாபிமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த மோசமான காலங்களில், ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையாக திரண்டு உதவிக் கரம் நீட்டக் கடமைப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்களுக்கு நீர், சுகாதாரம்மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் நாங்கள் ஆதரவு அளிப்போம்.
சுமார் 10 லட்சம் அகதிகள் வசிக்கும் உலகின் மிகப்பெரிய முகாம் அமைந்துள்ள பங்களாதேஷின் காக்ஸ் பஜாரும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதரவு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் பேரழிவு அபாயத்தை குறைக்கும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியாக மட்டும் 2 மில்லியன் யூரோக்களுக்கு மேல் வந்துள்ளது, மேலும் நேபாளத்தில் அங்கு குறிப்பாக நகரங்களில் ஏற்படும் தீ, வெள்ளம் மற்றும் பூகம்பங்களுக்குப்
பிறகு அவற்றை மேம்படுத்துவதற்காக, கூடுதலாக 2 மில்லியன் யூரோக்கள் நேபாளத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது
பிலிப்பைன்ஸில்,பேரழிவு அபாயங்களிலிருந்து மக்களை மீட்கவும் அவர்களது மறுவாழ்வுக்கு உதவும் வகையிலும் அதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவும் வகையில் 1 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும்.
இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையர் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.