புதுடெல்லி:
தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அரசுடன் எதிர்க்கட்சிகள் உடன்படவில்லை என்றால் ஒவ்வொருமுறையும் தேச விரோதி என்ற பட்டமே கிடைக்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் சாடியுள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு ‘வசைக்குழுக்களை’ ஏவி விடுகிறது. ஆனால் அரசை எதிர்த்தால் அது தேச விரோதமாக எப்படி பார்க்கப்பட முடியும், அரசை எதிர்த்தாலும் இந்தியாவை நேசிக்க முடியுமே, ஆதரிக்க முடியுமே என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
லோக்சபாவில் ‘சட்டவிரோத செயல்கள் தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா மீது மொய்த்ரா கருத்து கூறும்போது இவ்வாறு தெரிவித்ததோடு இந்த மசோதா “கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று விமர்சனம் செய்தார்.
“தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு முறை எதிர்க்கட்சிகள் அரசுடன் உடன்படாமல் கேள்விகள் எழுப்பப் படும்போதெல்லாம் எதிர்க்கட்சிகளை தேச விரோத சக்திகள் என்று முத்திரை குத்திவிடுகின்றனர்” என்று சாடினார்.
இவரது விமர்சனங்களுக்குப் பதில் அளித்த மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “யாரையும் தேச விரோதி என்று அழைக்கவில்லை” என்றார்.
இதனையடுத்து குழப்பமும் கூச்சலும் அவையில் ஏற்பட, பாஜக-வின் அலுவாலியா, அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது. அமர்வை வழிநடத்திய மீனாட்சி லேகி, நோட்டீஸ் அளிக்காமல் யாரும் இன்னொரு உறுப்பினர் மீது அவதூறு பேச முடியாது என்று அவை ஒழுங்கை நினைவூட்டினார்.
இதற்குப் பதிலளித்த திரிணமூல் எம்.பி. மஹுவா மோய்த்ரா, தன் விமர்சனம் விஷமப் பிரச்சாரம், விஷமப் பரப்புரைக்கு எதிரானதே தவிர தனிஉறுப்பினர் மீதானது கிடையாது என்றார்.
மேலும் இந்த மசோதா பற்றி மொய்த்ரா கூறும்போது, தனிநபர்களை எந்த விதமான முறையான நடைமுறையுமின்றி தீவிரவாதி என்று குற்றம்சாட்டும் விதமாக இந்த மசோதா அமைந்துள்ளது. மேலும் இம்மசோதா மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிப்பதாக உள்ளது, என்றார்.