புதுடெல்லி
மக்களவையில் இன்று சட்டவிரோத செயல்கள் தடுப்பு மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது.
என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், தீவிரவாத செயல்களை தடுக்கவும் வகை செய்யும் 2 மசோதாக்களை மத்திய அரசு உருவாக்கியது. தேசிய புலனாய்வு முகமை சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சைபர் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்க இந்த சட்டத்திருத்தம் அனுமதி அளிக்கும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 4வது அட்டவணையில் செய்யப்பட்டுள்ள திருத்தமானது, தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை விசாரிக்க என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகிறது. தற்போது தீவிரவாத அமைப்புகளை மட்டுமே பட்டியலிட்டு விசாரிக்கும் அதிகாரம் என்ஐஏவுக்கு உள்ளது.
இந்த சட்ட மசோதா மீதான விவாத்தில் கலந்த கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘நாட்டில் தீவிரவாத செயல்களை தடுக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் தீவிரவாத செயல்கள் இனிமேல் கடுமையாக குறையும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே இந்த சட்டத்தை கொண்டு வந்தது. இதனை நிறைவேற்ற முயற்சி எடுத்தது’’ எனக் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய இதுகாதுல் முஸ்லிமன் கட்சித் தலைவர் ஒவைசி, ‘‘வேண்டாதவர்களை துன்புறுத்துவதற்காக இந்த சட்டத்தை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தான். இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.