பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

மத்திய அரசின் இணையதளத்தை போலியாக உருவாக்கி 100-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்தவர் கைது 

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மத்திய அரசின் இணையதளத்தை போலியாக உருவாக்கி, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசின் இணையதளம் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சர்தா அபியான். கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, ஆசிரியராக விண்ணப்பிக்கும் இணையதளமாக உள்ளது. 

இந்த இணையதளத்தைப் போன்றே போலியாக மேற்கு வங்க மாநிலம், நார்த் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்ஜித் சாட்டர்ஜி என்பவர் உருவாக்கினார். 

இந்த இணையதளத்தில் பதிவு செய்வோரிடம், ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். இதற்காக இணையதளத்தில் பதிவு செய்வோரிடம் குறிப்பிட்ட கட்டணம் பெற்றும் ஏமாற்றியுள்ளார். 

இந்த மோசடி விவகாரம் பற்றி அறிந்த, மத்திய தகவல் தொழில்நுட்பட்ப அமைச்சகத்தின் விஜிலன்ஸ் அதிகாரி ஹரி சேவாக் சர்மா என்பவர் டெல்லி போலீஸில் புகார் அளித்தார். 

போலீஸார் நடத்திய விசாரணையில் www.pmgdisha.in என்ற மத்திய அரசின் உண்மையான இணையதளத்துக்கு மாறாக, போலியாக wbpmgdisha.in என்று இணையதளத்தை பிரசன்ஜித் சாட்டர்ஜி உருவாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் போலீஸார் அந்த இணையதளத்தை முடக்கி வைத்தனர். 

இந்த இணையதளம் எங்கிருந்து செயல்படுகிறது என்பதை அதன் இணையதள முகவரியின் மூலம் சைபர் போலீஸார் தேடிக் கண்டுபிடித்ததில், மேற்கு வங்க மாநிலம், 24 பர்கனா மாவட்டத்தில் இருந்து அது இயங்கி வருவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மேற்கு வங்க போலீஸார் உதவியுடன் பிரசின்ஜித் சாட்டர்ஜியைக் கைது செய்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 100-க்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்க் (Hard Disk) உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிடிஐ

SCROLL FOR NEXT