மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள ஓர் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கான உணவை கழிவறையில் சமைத்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதைவிட அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது, அம்மாநில அமைச்சர் ஒருவர் நடந்த சம்பவம் தவறில்லை என கருத்து கூறியிருப்பது.
அந்தக் கழிவறைக்குள் ஒரு எல்.பி.ஜி. சிலிண்டர், மண் அடுப்பு என இரண்டுமே இருந்துள்ளது. பாத்திரங்கள் சில கழிவறைத் தரையில் கிடப்பதும் தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் தேவேந்திர சுந்தர்யால், "குறிப்பிட்ட இந்த அங்கன்வாடி மையத்தில் சுய உதவிக் குழு ஒன்று உணவு சமைக்கும் வேலையை மேற்கொள்கிறது. அவர்களே கழிவறையைக் கையகப்படுத்தி அதனை தற்காலிக சமையலறையாகப் பயன்படுத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாக சமையலறை அமைக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அமைச்சரின் அதிர்ச்சி கருத்து..
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில் மத்தியப் பிரதேச அமைச்சர் இம்ராட்டி தேவி அதிர்ச்சிகரமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
"அடுப்புக்கும் டாய்லட் சீட்டுக்கும் நடுவே ஒரு தடுப்பு இருக்கும்பட்சத்தில் கழிவறையை சமையலறையாகப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஒருவேளை நம் வீட்டுக்கு வரும் உறவினர்கள் கழிவறை வீட்டுக்கு வெளியே தனியாக இல்லாமல் நவீன முறைப்படி வீட்டினுள்ளேயே இருக்கிறது எனக் கூறி சாப்பிட மறுத்துச் சென்றால் நாம் என்ன செய்யமுடியும்? மேலும், அந்த கழிவறை பயன்பாட்டில் இல்லை. அதனுள் மணலும் ஜல்லியும் போடப்பட்டுள்ளது. அதனால் அதனை சமையலறையாகப் பயன்படுத்தியதில் எந்தத் தவறும் இல்லை. இருந்தாலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்" என்றார்.