கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரைச் சந்தித்து இன்று (ஜூலை 24) உரிமை கோரவிருக்கிறார் பி.எஸ்.எடியூரப்பா .
முன்னதாக, கர்நாடகா சட்டப்பேரவையில் நேற்று (ஜூலை 23) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. மொத்தம் பதிவான 204 வாக்குகளில் அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், அரசுக்கு எதிர்ப்பாக 105 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து குமாரசாமி ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆட்சி கவிழ்ந்ததால் பெங்களூருவில் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரிமை கோருகிறார்
இந்நிலையில், கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா இல்லத்தில் குவிந்த பாஜக தொண்டர்கள் இனிப்புகளைப் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இன்று மாலைக்குள் எடியூரப்பா ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கக் கோருகிறார். தொடர்ந்து நாளை பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில், மும்பையில் முகாமிட்டிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று கர்நாடகா திரும்புகின்றனர்.
கர்மத்தின் பலன்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் கர்நாடக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், ஊழல் மலிந்து புனிதமற்ற ஒரு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. நாங்கள் கர்நாடகாவில் நிலையான ஆட்சியைத் தருவோம் என மக்களிடம் உறுதியளிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று கர்நாடகா இழந்த வளத்தை மீட்டெடுப்போம்" எனப் பதிவிட்டிருந்தது.
4-வது முறையாக முதல்வர்
எடியூரப்பா இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள நிலையில் நாளை அவர் முதல்வராகப் பதவியேற்றால் கர்நாடக மாநில முதல்வராக அவர் 4-வது முறையாகப் பதவியேற்பார்.
கடந்த 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால், இருமுறையுமே அவரால் முழுமையாக பதவிக்காலத்தில் தொடர முடியவில்லை. 2007-ல் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார் எடியூரப்பா. ஆனால், வெறும் 7 நாட்களில் மஜத ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் அவர் முதல்வர் பதவியை இழந்தார்.
பின்னர் 2008 மே மாதம் மீண்டும் முதல்வரானார். ஆனால் 2011 ஜூலை மாதம் ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் 2012-ல் கர்நாடக ப்ரஜா பக்ஷா என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், 2014 மக்களவைத் தேர்தலை ஒட்டி புதிய கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
2018 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடித்தும் ஒரு வாரத்துக்கு மேல் முதல்வராகத் தொடர முடியவில்லை. காங்கிரஸ் - மஜத ஆட்சியமைத்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது அவர் முதல்வராவது 4-வது முறையாகும்.