ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்களுக்கு மாற்றாக அதன் நிலைக்குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றை முறையாகப் பயன்படுத்தி தம் மாநிலத்திற்காக தமிழக எம்.பி.க்கள் பலன் சேர்ப்பார்களா? எனக் கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை மத்திய அரசின் முன்வைத்து வாதிட்டும், சட்டம் இயற்றியும் பலன் பெற்றுத்தரும் இடமாக இருப்பது நாடாளுமன்றம். இதில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் தம் பிரச்சினைகள் அனைத்தையும் எழுப்பும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
மரபுப்படி நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் வருடத்திற்கு மூன்று முறை நடைபெறுகின்றன. பட்ஜெட்டிற்காக 60 நாள், மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் தலா 20 நாட்கள் நடைபெற வேண்டும். ஆனால், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பும் எதிர்கட்சிகளின் அமளியால் அதன் கூட்டங்கள் வருடம் ஒன்றுக்கு சராசரியாக 70 நாட்கள் மட்டும் நடைபெறுகிறது.
இதனால் கிடைக்கும் குறைந்த கால அவகாசம் காரணம். பொதுமக்களின் பிரச்சனைகளை முழுவதுமாக எழுப்ப எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. நாடு சுதந்திரம் பெற்றது முதல், படிப்படியாக அதிகரித்த இந்த பிரச்சினை 1990 ஆம் ஆண்டிற்குப் பின் அதிகமானது.
இதைச் சமாளிக்கும் பொருட்டு 1993-ல் மக்களவை சபாநாயகராக இருந்த சிவராஜ் பாட்டீலால் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. இதை ஏற்ற பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அரசு, அனைத்து துறைகளுக்காக 24 நிலைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
மக்களவைக்கு 16, மாநிலங்களவைக்கு 8 என 24 குழுக்களில் தலா ஒன்றுக்கு 31 எம்.பி.க்கள் உறுப்பினர்கள். மக்களவைக்கானதில் அதன் 21 எம்.பி.க்களும், 10 மாநிலங்களவை எம்.பி.க்களும் இடம் பெறுவார்கள்.
அதேபோல், மாநிலங்களவைக்கானதில் அதன் எம்.பி.க்கள் 21, மக்களவையின் 10 எம்.பி.க்களும் உறுப்பினர்களாவார்கள். மத்திய அரசின் கல்வி மற்றும் பொது என அனைத்து வகையான நிறுவனங்களின் நிதி மற்றும் நடவடிக்கைகளை ஆராய்ந்து கண்காணிக்கவும் ஐந்து குழுக்கள் தனியாக உள்ளன.
இவையன்றி, ஒழுங்கு நடவடிக்கை, விதிமுறை, சபாநாயகரிடமான புகார்கள், நாடாளுமன்ற உறுதிமொழிக்குழு, தலைவர்களின் சிலை மற்றும் உருவப்படங்களுகான உள்ளிட்ட 17 குழுக்களும் உள்ளன. இதன் உறுப்பினர்களாக அதன் எம்.பி.க்களின் தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து ஒன்றுக்கும் அதிகமான குழுக்களில் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
இக்குழுக்களின் தலைவர்களாக மூத்த எம்.பி.க்கள் அமர்த்தப்படுகின்றனர். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவற்றின் அவைத்தலைவர்களுக்கு ஒரு நிலைக்குழுவின் தலைமை பதவி கிடைக்கும்.
இந்தவகையில் திமுகவின் மக்களவைத் தலைவரான டி.ஆர்.பாலுவும் ஒரு குழுவில் தலைவராக அமர்த்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. இவர் தம் கட்சியின் எம்.பி.க்களுக்கு பொருத்தமான குழுக்களில் உறுப்பினராகப் பரிந்துரைப்பார்.
ஆனால், மத்திய அமைச்சர்களுக்கு நாடாளுமன்ற இரு அவைகளைப் போலவே, நிலைக்குழுக்களிலும் மற்ற எம்.பி.க்களைப் போல் செயல்பட வாய்ப்புகள் கிடைக்காது. ஏனெனில், மத்திய அரசை நடத்துபவர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள், இரு அவைகளைப் போல், நிலைக்குழுக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பாகி விடுகிறது.
இந்நிலையில், அனைத்துக் குழுக்களின் செயல்பாடுகள் நாடாளுமன்ற இரு அவைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல. நாடாளுமன்றத்திலும் பேச முடியாத பிரச்சினைகளை தம் குழு தலைவரின் அனுமதியுடன் இங்கு எழுப்பலாம்.
எம்.பி.க்களின் யோசனை
அப்போது, அப்பிரச்சினையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை குழுவின் முன் அழைத்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பலாம். அத்துறைகளில் செய்யத்தகுந்த பல திட்டங்கள் மற்றும் யோசனைகளையும் எம்.பி.க்கள் அக்குழுவில் முன்வைக்கலாம்.
அரசு திட்டங்கள்
இந்த அரசு திட்டங்களை தம் தொகுதிகளில் செயல்படவில்லை எனில் அதன் மீதும் கேள்வி எழுப்பலாம். இவை, அக்குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
கேள்வி எழுப்பும் வாய்ப்பு
இதைக் குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பி நிறைவேற்ற வலியுறுத்துவார். அதேபோல், நிதி மற்றும் நடவடிக்கை குழுவிலும் மத்திய அரசின் நிறுவனங்களை அழைத்து கேள்வி எழுப்பலாம்.
எம்.பி.க்களுக்கு உரிமை
அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக உறுதி செய்யப்பட்டால் அதற்கான நடவடிக்கைக்கு அக்குழுவினர் நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைக்கலாம். இதுபோல், மற்ற குழுக்களிடம் வரும் புகார்கள் மீதும் அதன் உறுப்பினர்களான எம்.பி.க்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.
அமைச்சர்களின் உறுதிமொழி
இதில், நாடாளுமன்ற உறுதிமொழிக்குழு மிகவும் முக்கியமானதாகும். நாடாளுமன்ற இரு அவைகளில் எம்.பி.க்களின் கேள்விகள் மற்றும் பிரச்சினைகளில் அமைச்சர்கள் அளிக்கும் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை எனில் இக்குழுவில் புகார் அளித்து நடவடிக்கை எழுக்கலாம்.
இந்தி, ஆங்கிலத்தில் உரையாடல்
இவற்றின் பலன்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான எம்.பி.க்கள் இக்குழுக்களில் பெயரளவிற்கே உறுப்பினர்களாகப் பதவி வகித்து வந்தார்கள் எனப் புகார்கள் உண்டு. மேலும், இக்குழுக்களில் பெரும்பாலும் இந்தி அல்லது ஆங்கில மொழிகளிலேயே உரையாடல்கள் நடைபெறும்.
பொம்மைகளாக எம்.பி.க்கள்
இதற்காக அம்மொழிகள் அறியாத எம்.பி.க்கள் முன்கூட்டி தெரிவித்து மொழிபெயர்ப்பாளர்களை அமர்த்திக்கொள்ளலாம். ஆனால், கடந்த ஆட்சியில் பல தமிழக எம்.பி.க்கள் மொழிபெயர்ப்பாளர் உதவி பெறாமல் பொம்மைகளைப் போல் குழுவில் அமர்ந்திருந்ததும் நிகழ்ந்துள்ளது.
பயணப்படி ரூ.25,000
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் இல்லாத நாட்களிலும் நடைபெறும் இக்கூட்டங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு சுமார் 25. இதற்கு வரும் எம்.பி.க்களுக்கு அளிக்கப்படும் விமானப் பயணச்சீட்டு தொகையில் கால்பங்கு பயணப்படியாக சுமார் 25,000 ரூபாய் கிடைத்து வந்தது.
எம்.பி.க்களின் சலுகை ரத்து
இதைப் பெறுவதற்காகவே அக்குழுக் கூட்டங்களுக்கு வந்த எம்.பி.க்களும் உண்டு. ஆனால், இந்த பயணப்படி சலூகையை 2018-ல் பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்தார். இதன் பிறகு அக்குழுக்களின் கூட்டம் நடைபெறுவது வெகுவாகக் குறைந்தன.
பயன்படுத்துவார்களா?
இந்த நிலைமையை மாற்றும் வகையில் நம் தமிழக எம்.பி.க்கள் இந்தமுறை நாடாளுமன்ற நிலைக்குழுக்களை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வார்களா எனக் கேள்வி நிலவுகிறது.