பெங்களூரு
கர்நாடகாவில் சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் அவர்களது வீட்டைச் சுற்றி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்து, மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர். 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என சபாநாயகர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் பெங்களூருவில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுயேச்சை எம்எல்ஏக்களான நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் தங்கியுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு 6:30க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்பதற்காக இருவரும் புறப்பட்டனர். அப்போது அந்த வீட்டை சுற்றி திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தடுக்க காங்கிரஸ் சதி செய்வதாக பாஜக புகார் கூறியுள்ளது.