உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம் 
இந்தியா

உலகிலேயே மிக உயரமான ராமர் சிலை அயோத்தியில் அமைக்க முடிவு: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் அறிவிப்பு

செய்திப்பிரிவு

லக்னோ,
உலகிலேயே மிக உயரமானதாக அயோத்தியில் ராமர் சிலை அமைக்கப்படும். இது குஜராத்தில் உள்ள படேல் சிலையைக் காட்டிலும் உயரமானதாக இருக்கும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

அயோத்தியில் அமைக்கப்படும் ராமர் சிலை நாட்டிலேயே, உலகிலேயே  உயரமானதாக இருக்கும். குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை 183 மீட்டர் உயரமானதாக இருக்கும் நிலையில், இந்த சிலை 251 மீட்டர் உயரமானதாக இருக்கும். 

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதல்வர் ஆதித்யநாத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், "அயோத்தியில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பூங்கா அமைக்கப்பட்டு அதில் மிகப்பெரிய ராமர் சிலை நிறுவப்படும். இந்த சிலை குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையைக் காட்டிலும் ராமர் சிலை உயரமாக இருக்கும். இந்த சிலை அமைக்கும்போது, தேவையான உதவிகள் குஜராத் மாநில அரசிடம் இருந்து பெறப்படும். 

ஒட்டுமொத்தமாக அயோத்தி நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள், அதைச் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படும். 

டிஜிட்டல் மியூசியம், நூலகம், பூங்காக்கள், வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடங்கள், ஓட்டல்கள் ஆகியவை ராமர் சிலை அமையும் பகுதியில் உருவாக்கப்படும்.  மாநில அரசின் உற்பத்திக் கழகம் இந்த சிலை அமைக்கும் திட்டத்தையும், கட்டுமானத்தையும் மேற்பார்வை செய்யும். இந்தத் திட்டத்துக்குத் தேவையான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவதையும் கழகம் செய்து கொள்ளும்’’எனயோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

251 மீட்டர் உயரத்தில் அமைய இருக்கும் ராமர் சிலை உலகிலேயே மிக உயரமானதாக இருக்கும். நியூயார்க்கில் உள்ள சுதந்திரதேவி சிலை 93 மீட்டர் மட்டுமே. மும்பையில் உள்ள அம்பேத்கர் சிலை ரூ.137.2 மீட்டர், குஜராத்தில் உள்ள படேல் சிலை 183 மீ்ட்டர், சீனாவில் உள்ள புத்தர் சிலை 208 மீட்டர், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜிசிலை 212 மீட்டர் உயரம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT