பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

தனியார் டிஜிட்டல் கரன்ஸிக்குத் தடை; பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை: ஆய்வுக்குழு அறிக்கையில் பரிந்துரை

செய்திப்பிரிவு

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

தனியார் டிஜிட்டல் கரன்ஸிக்கு நாட்டில் முழுமையான தடை விதிக்க வேண்டும், அதை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினால் அபாரதமும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க வேண்டும் என்று அமைச்சகங்களுக்கு இடையிலான ஆய்வுக் குழு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டில் கறுப்புப் பணம் இருப்பதைப் போன்று, சட்டவிரோதமாக பிட் காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்ஸியில் (Cryptocurrency) சிலர் முதலீடு செய்து வருவது அதிகரித்து வந்தது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் இந்த பிட் காயின் மீது முதலீடு செய்வதும் அதிகரித்து வந்தது.

பிட் காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்ஸியை அமெரிக்கா, இங்கிலாந்து, பின்லாந்து, கனடா, ஜெர்மனி, பல்கேரியா, பெல்ஜியம், சைப்ரஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஹாலந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் சில சட்டங்களுக்கு உட்பட்டு அங்கீகரித்துள்ளன.

அதேசமயம், சீனா, ரஷ்யா,  பொலிவியா, கொலிம்பியா, ஈக்வெடார், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட  பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில், நாளுக்கு நாள் பிட் காயின் மீது மக்களின் மோகம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது.

இக்குழுவின் தலைவராக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் நியமிக்கப்பட்டார். மேலும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், பங்குச்சந்தை ஒழுங்கு நிறுவனமான செபி, ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் இருந்து மூத்த அதிகாரிகள் அதில் உறுப்பினர்களாக இடம் பெற்று பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தனர்.

டிஜிட்டல் கரன்ஸி குறித்து ஆய்வு செய்த குழு தனது பரிந்துரையை சமீபத்தில் மத்தியஅரசிடம் அளித்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ," கிரைப்டோ கரன்ஸி மற்றும் ரெகுலேஷன் ஆஃப் அபிஸியல் டிஜிட்டல் கரன்ஸி பில்- 2019" என்ற வரைவு மசோதாவை உருவாக்கியுள்ளது.

இந்தக் குழு அளித்த பரிந்துரையில் முக்கிய அம்சமாக, தனியார் டிஜிட்டல் கரன்ஸியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும், சட்டவிரோதமாக எந்தவகையான டிஜிட்டல் கரன்ஸியைப் பயன்படுத்துவோருக்கு அபராதமும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அதிகரித்துவரும் டிஜிட்டல் கரன்ஸி மீது இந்தியர்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருவது அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான டிஜிட்டல் கரன்ஸியும் எந்த அரசாலும் அதிகாரபூர்வமாக உருவாக்கப்படாத உறுதித்தன்மை இல்லாதது.

டிஜிட்டல் கரன்ஸி அனைத்துக்கும் நிலையான மதிப்பு இல்லை. அதன் மதிப்பை நாம் சேமித்து வைத்திருக்க முடியாது. எந்த வகையிலும் பரிமாற்றமும் செய்து கொள்ள முடியாது.

ஆதலால், எங்களின் ஆய்வுகளின்படி இந்தியாவில் தனியாரின் டிஜிட்டல் கரன்ஸிகளை அனுமதிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும். இது போன்ற கரன்ஸிகளைப் பணமாக மாற்ற அனுமதிக்கக் கூடாது. தனியார் டிஜிட்டல் கரன்ஸிகளை ஒருபோதும் பணத்துக்கு மாற்றாகப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

அதேசமயம், ரிசர்வ் வங்கி, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு டிஜிட்டல் கரன்ஸி வெளியிடும் முடிவுக்கு தடை ஏதும் இல்லை. அரசு அங்கீகாரம் இல்லாமல், ரிசர்வ் வங்கி ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்படும் அனைத்து டிஜிட்டல் கரன்ஸிகளையும் தடை செய்ய வேண்டும். இதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

டிஜிட்டல் கரன்ஸிகளை யாரேனும் வைத்திருந்தாலோ, உருவாக்கினாலோ, விற்பனை செய்தாலோ, பரிமாற்றம் செயாதாலோ, அவருக்கு அபராதமும், ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுவரை சிறை தண்டனையும் விதிக்கலாம். இந்த அபராதம் என்பது, பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த இழப்பீட்டைப் போன்று 3 மடங்கு அதிகமாகவும், அல்லது லாபமடைந்தவர் அடைந்த லாபத்தைப் போன்று 3 மடங்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்’’.

இவ்வாறு வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT