இந்தியா

குமாரசாமி ஆட்சி நிச்சயம் கவிழும்; மாலைவரை காத்திருப்போம்: கர்நாடக பாஜக எம்.பி. ஷோபா கரந்தலாஜே

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மஜத அரசு நிச்சயம் கவிழும். அதற்காக மாலைவரை காத்திருப்போம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஷோபா கரந்தலாஜே.

சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 23) மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க  வேண்டும் என்று ஆளும் காங்.,- மஜத கூட்டணி அரசுக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கெடு விதித்துள்ளார்.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பாஜக எம்.பி. ஷோபா கரந்தலாஜே, "கர்நாடகாவின் ஆளுங்கட்சிக்கு போதிய பலம் இல்லை. இது மைனாரிட்டி அரசு. அவர்களின் எம்.எல்.ஏ.,க்கள் மும்பையில் இருக்கின்றனர்.

அவர்களுக்கு இங்கு வரவும் விருப்பமில்லை. இன்று மாலைவரை காத்திருப்போம். இந்த அரசு நிச்சயம் கவிழும் என நம்பிக்கையிருக்கிறது. இது மக்களுக்கான அரசு அல்ல. எம்.எல்.ஏ.,க்களைப் போலவே மக்களும் இந்த ஆட்சியின்மீது அதிருப்தியில்தான் இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 19-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தபோது ஷோபா கரந்தலாஜே, சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வெறுங்கால்களுடன் 1001 படிகள் ஏறிச் சென்று எடியூரப்பா முதல்வராக வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையின் பின்னணி:

கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ்பெற்று பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து 2 நாட்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மட்டுமே நடைபெற்றது. இந்நிலையில் நாளை  (ஜூலை 24-க்கு) நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒத்திவைக்க குமாரசாமி அவகாசம் கோரினார். ஆனால் சபாநாயகர் மறுத்ததால் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த சூழலிலேயே மாலைவரை காத்திருப்போம் என பாஜக எம்.பி. ஷோபா கர்நதலாஜே கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT