பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

சொத்துக்களை பாதுகாக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணிக்கு எடுக்கும் ரயில்வே

செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ
நாடுமுழுவதும் உள்ள தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக ரயில்வே துறை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. 

இதற்கான அதிகாரபூர்வமான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ரயில்வே துறையில் ஹோம் கார்டுகள், சிறிய அளவிலான பாதுகாவல் பணிக்கு ஓய்வு பெற்ற ராணுவத்தினரை பணிக்கு அமர்த்திக் கொள்ள ரயில்வே வாரியம் அந்தந்த மண்டல பொதுமேலாளர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தது. 

இப்போது இந்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு சைனிக் கல்யாண் வாரியத்தின் மூலம் ரயில்வே துறை நாடுமுழுவதும் உள்ள தங்களின் சொத்துக்களை  பாதுகாக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணிக்கு அமிர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 18-ம் தேதி ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

கோடைகாலத்தில் ரயில்நிலையங்களில் ஏற்படும் நெரிசல்கள், திருவிழாக் காலங்கள், பண்டிகை காலங்கள் உள்ளிட்ட முக்கியமான நாட்களில் தேவைப்படும்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ள ரயில்வே பொது மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வேயின் புள்ளிவிவரங்கள்படி ஆர்பிஎப் மற்றும் ஆர்பிஎஸ்எப் பாதுகாப்பு படையில் சி மற்றும் டி பிரிவில் 76 ஆயிரத்து 563 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 15 சதவீதம் வரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணியமர்த்தலாம் எனும் உத்தரவைக் காட்டிலும் இது குறைவாகும். 

          
SCROLL FOR NEXT