முதல்வர் குமாரசாமி : கோப்புப்படம்
பெங்களூரு,
கர்நாடக சட்டப்பேரவையில் பிரியாணி தொடர்பாக எழுந்த விவாதத்தின்போது, நான் பிரியாணி சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் என்று முதல்வர் குமாரசாமி பதில் அளித்தார்.
கர்நாடக ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, தற்போது மும்பை சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியும் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியில் முடிந்தது.
இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை கடந்த 19-ம் தேதி தாக்கல் செய்து முதல்வர் குமாரசாமி பேசினார். அந்த விவாதம் நிறைவடையும் முன்பே சட்டப்பேரவையை 22-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.
சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இன்னும் காலஅவகாசம் தேவை என்று கோரி முதல்வர் குமாரசாமியின் கோரிக்கையை சபாநாயகர் ரமேஷ் குமார் நிராகரித்து நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்தி முடிக்க கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வாதம் இன்று தொடங்கி நடந்து வநத்து. அப்போது, பாஜக எம்எல்ஏ சி.டி.ரவி எழுந்து பேசுகையில், "கர்நாடகத்தில் ரூ.400 கோடி மோசடி செய்த ஐஎம்ஏ நிறுவன வழக்கு குறித்து அனைவருக்கும் தெரியும். அந்த ஐஎம்ஏ நிறுவனத்தின் அதிபர் மன்சூர் கானுடன் பிரியாணி சாப்பிட்டவரை அரசு பாதுகாக்க முயல்கிறது. மன்சூர் கானுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டவர் யார்" எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்வர் குமாரசாமி பேசுகையில், "பிரியாணி என்று எம்எல்ஏ ரவி குறிப்பிடுவது என்னைத்தான். அமைச்சர் பைரேகவுடா என்னை ஒருநாள் இப்தார் விருந்துக்காக அழைத்துச் சென்றார். அப்போது அங்கு இருப்பது மன்சூர் கான் என்பது எனக்குத் தெரியாது.
அதன்பின் எனக்கு சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்ட பின் நான் பிரியாணி சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன். மன்சூர் கான் சொகுசு இல்லத்தில் நான் சென்று பிரியாணி சாப்பிடவும் இல்லை" எனத் தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்டு சபாநாயகர் ரமேஷ் குமார் பேசுகையில், "முதல்வர் குமாரசாமி சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்குப் பதிலாக மீன் சாப்பிடலாம். ஒட்டுமொத்தமாக அசைவத்தை வெறுத்துவிட வேண்டிய அவசியம் இல்லை. மீன் சாப்பிடுங்கள்" என அறிவுரை கூறியதால், அவையில் சிரிப்பொலி எழும்பியது.
ஐஎம்ஏ நிறுவனத்தின் மோசடியாளர் மன்சூர் கானுடன் அமர்ந்து முதல்வர் குமாரசாமி பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை கடந்த மாதம் பாஜக வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு விளக்கம் அளித்த ஜேடிஎஸ் கட்சி, இந்தப் புகைப்படம் முதல்வராக குமாரசாமி பதவி ஏற்றபின் எடுக்கவில்லை. அதற்கு முன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.