பெங்களூரு, பிடிஐ
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடுதல் அவகாசத்தை முதல்வர் குமாரசாமி கேட்ட நிலையில், அதற்கு சபாநாயகர் ரமேஷ் குமார் மறுத்துவிட்டார்.
என்னைப் பலிகடா ஆக்கிவிடாதீர்கள். இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் குமாரசாமியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்து மும்பையில் சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். இவர்களைச் சமாதானம் செய்ய காங்கிரஸ் கட்சி செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இதனிடையே, 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில், முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வார இறுதியில் விவாதம் நடந்த நிலையில் அவை திங்கள்கிழமைக்கு (22-ம்தேதி) ஒத்திவைக்கப்பட்டது.
மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களிடம் சமாதானப் பேச்சில் காங்கிரஸ், ஜேடிஎஸ் தலைவர்கள் ஈடுபட்டும் அது கடைசிவரை பயனளிக்கவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் முடிவில் திட்டவட்டமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை இன்று ஒரு மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது. அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடுதலாக அவகாசம் தர வேண்டும். வரும் 24-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கக வேண்டும் என்று கோரினார்.
இதற்குப் பதில் அளித்து சபாநாயகர் ரமேஷ் குமார் பேசுகையில், "நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் இப்போது இருந்தே தொடங்க வேண்டும். ஒவ்வொருவரும் நம்மைக் கவனித்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றமும் நாம் செய்வதைக் கூர்ந்து கவனித்து வருகிறது. தயவு செய்து என்னை இந்த விவகாரத்தில் பலிகடா ஆக்கிவிடாதீர்கள். நாம் முடிவுசெய்துள்ளபடி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவோம் என்று உறுதியளித்துள்ளது. அந்த உறுதிமொழியைக் காப்பாற்றி அரசு கண்ணியத்துடன் நடத்தி இன்றுக்குள் முடிக்க வேண்டும். இதற்கு மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தாமதம் செய்யக்கூடாது.
நாம் பொதுவாழ்க்கையில் இருக்கிறோம். மக்கள் நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கவனித்து வருகிறார்கள். நாம் நேரத்தை வீணடிக்கிறோம் என்ற கருத்து உருவானால், அது எனக்கும் மற்றவர்களுக்கும் நல்லதல்ல.
சட்டப்பேரவைத் தலைவர் சித்தராமையா கொறடா மூலம் உத்தரவு பிறப்பிக்க உரிமை இருக்கிறது. கொறடா உத்தரவு பிறப்பிப்பது அவரது உரிமை. வெளியில் இருக்கும் எம்எல்ஏக்கள் தவிர்த்து மற்ற எம்எல்ஏக்கள் மீது ஏதேனும் புகார்கள் வந்தால், அது குறித்து நான் விதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பேன் " எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய பாஜக மூத்த தலைவர்கள் ஜெகதீஸ் சட்டார், மதுசுவாமி ஆகியோர், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தி முடிக்க வேண்டும். விவாதத்தை முடிவின்றி நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினார்கள்.