40 வருடங்களாக சகோதரி, தாய் தந்தையரை பிரிந்திருந்த கமலா. 
இந்தியா

40 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சகோதரிகள்: பாலமாக இருந்த பேஸ்புக்

செய்திப்பிரிவு

திஸ்பூர்

ஆந்திராவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ பெண் ஒருவர் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்குப் பிறகு தனது நீண்டகாலமாக பிரிந்திருந்த சகோதரியுடன் மீண்டும் இணைய பேஸ்புக் குழுவின் வைரலான போஸ்டிங் பாலமாக இருந்துள்ளது. 

ஜோதி எட்லா ருத்ராபதி, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார், இவர் தனது சகோதரி கமலாவை 1980க்குப் பிறகு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கடந்த பிறகு சில வாரங்களுக்கு முன்பு சந்தித்தது அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 இதுகுறித்து உள்ளூர் செய்தியாளர்களிடம் ஜோதி கூறியதாவது:

கடந்த மாதம் ஜூலை 15ம் தேதி, மிசோரம் நியூஸ் என்ற பேஸ்புக் குழுவில் சகோதரியைக் கண்டுபிடிப்பதில் அதன் உறுப்பினர்களின் உதவியை நாடினேன். அவர்கள் வெளியிட்ட நிலைத்தகவலில் கமலா மற்றும் அவரது கணவர் ஹிமிங்லியானாவுடன் ஐந்து வயதுடைய எனது புகைப்படத்தையும் இணைத்தேன்.

இந்த இடுகை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலானது. பேஸ்புக்கில் சில மணிநேரங்களிலேயே, சகோதரி கமலா, ஆய்சால் புறநகரில் உள்ள லாயிபுவில் வசிக்கும் விவரம் வெளியானது பரவசமாக இருந்தது.

சகோதரி கமலாவுக்கு 1980ல் திருமணமானது. அவரது கணவர் சிஆர்பிஎப் காவலர். மிசோராமிலிருந்து ஆந்திராவிற்கு பணி நியமனம் பெற்றபோது கமலாவைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் மிசோரமுக்கு மாற்றலாகி சென்றபின் தொடர்பு நின்றுவிட்டது. மிசோரத்திற்கு குடிபெயர்ந்த பின்னர் அதன்பிறகு குடும்பத்தினர் யாருமே என் சகோதரியை சந்திக்கவில்லை. 

எங்கள் பெற்றோர்களான எட்லா ஜோசப் மற்றும் எட்லா கருணம்மா ஆகியோர் தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு சிஆர்பிஎஃப் முகாமுக்கு தன் மகள் மற்றும் மருமகனைத் தேடிச் சென்றனர், ஆனால் அங்குள்ள அதிகாரிகள் அவர்களின் மருமகன் வேலையை விட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

இவ்வாறு ஜோதி தெரிவித்தார்.

ஜோதி எட்லா ருத்ராபதி, தனது சகோதரி கமலாவுடன் இணைந்து ஊடகங்களிடம் பேசியபோது அவரது 86 வயது தாயாரும் அருகில் இருந்தார்.

தனது தந்தை 2010இல் இறந்துவிட்டதாக ஜோதி தெரிவித்தார். 

கணவர் 2013 இல் புற்றுநோய் இறந்துவிட்டதாகவும், தனக்கு நான்கு குழந்தைகள் என்றும் குழந்தை பருவத்திலேயே முதல் குழந்தை இறந்துவிட்டதையும். மற்ற மூவருக்கும் சமீபத்தில்தான் திருமணம் ஆனது என்றும் கமலா பகிர்ந்துகொண்டார்.

SCROLL FOR NEXT