ஸ்ரீநகர்
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை ஏன் கொல்லுகிறார்கள், மாநிலத்தை சூறையாடிய ஊழல் செய்த அரசியல்வாதிகளை கொல்ல வேண்டியது தானே என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் கார்கிலில் நடந்த சுற்றுலா விழாவை அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
லஞ்சம் மற்றும் ஊழல் தான் நாட்டின் பெரும் நோயாக உள்ளது. அப்பாவி மக்களையும், ராணுவ வீரர்களையும் தீவிரவாதிகள் கொல்லுகிறார்கள். அவர்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும். அதற்கு பதிலாக காஷ்மீர் மாநிலத்தின் வளங்களை கொள்ளை அடித்து ஊழல் செய்த அரசியல்வாதிகளை கொல்ல வேண்டியது தானே
துப்பாக்கியால் அரசையும், மக்களையும் பணிய வைக்க வேண்டும் என்ற தீவிரவாதிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள். காஷ்மீர் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தி தங்கள் வாழ்வை இழக்க வேண்டாம்.
காஷ்மீர் மட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சத்யபால் மாலிக் பேசினார்.
ஆளுநர் சத்யபால் மாலிக்கின் இந்த பேச்சுக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘எனது இந்த பதிவை சேமித்து வைத்துக் கொல்லுங்கள். காஷ்மீரில் இனிமேல் அரசியல்வாதி அல்லது அதிகாரிகள் கொல்லப்பட்டால் அது ஆளுநரின் உத்தரவாக தான் இருக்கும்’’ எனக் கூறியுள்ளார்.
இதுபோலவே மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.