பெங்களூரு
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேர் அதில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
முதல்வர் குமாரசாமிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், தற்போது அவரை ஆதரித்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏவும் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளதால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலை மையில் மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 3 வாரங்களில் 12 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் குமாரசாமி பதவி விலக வேண்டும் என போராட் டத்தில் குதித்த பாஜக, 107 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிக்கவும் முயற்சித்து வருகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்களில் 13 பேரை பாஜக தலைவர்கள் மும்பைக்கு அழைத்து சென்று, பலத்த பாதுகாப் புடன் சொகுசு விடுதியில் தங்க வைத் துள்ளனர். முதல்வர் குமாரசாமி 18-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான் மையை நிரூபிப்பதாக அறிவித்தார். அன்றைய தினம் காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவர் சித்தராமையா, ‘‘அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கு மாறு கொறடா மூலம் கட்டாயப் படுத்தக் கூடாது என கூறப்பட்டுள் ளது. இது அரசியலமைப்பின் 10-ம் அட்டவணை கொறடாவுக்கு அளித்துள்ள அதிகாரத்தை பறிக்கும் விதமாக இருக்கிறது. அதில் உரிய தெளிவு கிடைக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது''என்றார்.
இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆளுநர் வாஜூபாய் வாலா 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை. இதனால் மத்திய அரசு தலையிடுமாறு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சட்டபேரவைத் தலைவர் ரமேஷ்குமார், ‘‘நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் திங்கள் கிழமை மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு கட்டாயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்''என குமாரசாமிக்கு உத்தர விட்டுள்ளார். போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் குமாரசாமியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
முடிவு தெரியும்வரை வரமாட்டோம்
ராஜினாமாவை திரும்ப பெற்ற ராமலிங்க ரெட்டி மூலம் மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் சோமசேகர், முனி ரத்னா, பைரத்தி பசவராஜ், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதேபோல டி.கே.சிவகுமார், பரமேஷ்வர் ஆகியோர் ரோஷன் பெய்க், விஸ்வநாத் உள்ளிட்டோரிடம் பேசி வருகின்றனர். இதனை ஏற்காத அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்து, அதன் மீதான முடிவு அறிவிக்கப்படும் வரை பெங்களூரு திரும்பி வரமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர்கள் மிலிந்த் தியோரா, சஞ்சய் நிரூபம், கர்நாடக மேலிடப் பொறுப்பாளர் யசோமதி தாக்கூர் ஆகியோர் மூலமாக அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரு சொகுசு விடுதியில் இருந்து மும்பைக்கு தப்பி சென்ற காங்கிரஸ் எம்எல்ஏ மந்த் பாட்டீலையும் மனமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் நடுநிலை
கடந்த ஓராண்டாக குமாரசாமி அரசுக்கு ஆதரவாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ மகேஷ் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் மாயாவதியின் உத்தரவின்பேரில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள மகேஷை, குமாரசாமி மனமாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா, மாயாவதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, குமாரசாமியை ஆதரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பினை தெளிவுபடுத்தக்கோரி குமாரசாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தாக்கல் செய்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரசாமிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி போடவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, 224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் ( 2) கூட்டணியின் பலம் 118 ஆக இருந்தது. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் பாஜகவின் பலம் 105 ஆக இருந்தது. அண்மையில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 சுயேச்சை களும், ஒரு பகுஜன் சமாஜ் எம்எல்ஏவும் ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் பலம் 99 ஆக குறைந்துள்ளது. அதே வேளையின் 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அவ்வளவு எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத நிலையில் குமாரசாமியின் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.