பெங்களூரு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம், ஜூலை மாதம் தமிழகத்திற்கு காவிரியில் 34 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு, மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில், கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டிலும், கேஆர்எஸ், அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து கேஆர்எஸ். அணையில் இருந்து இருதினங்களுக்கு முன், வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 7,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், வினாடிக்கு 2,611 கனஅடி தண்ணீர் கால்வாய்கள் மூலம் விவசாயிகளின் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு சுமார் 5,000 கனஅடி தண்ணீர் செல்கிறது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இருகபினி அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 8,000 கனஅடிக்கும் கூடுதலான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து மத்தூரில் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.