ரூ.128 கோடி மின் கட்டணம் செலுத்த முடியாததால் இருளில் வசிக்கும் ஷமிம், அவரின் மனைவி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

ரூ.128 கோடி மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் வசிக்கும் முதியவர்: உ.பி. மின்வாரியத்தின் செயலால் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

ஹபூர், ஏஎன்ஐ

உத்தரப்பிரதேச மாநிலம், ஹபூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு ரூ.128 கோடி மின்கட்டணம் செலுத்தக் கோரி மின்வாரியத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாததால், முதியவரின் வீட்டுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் வசித்து வருகிறார். 

இந்த நோட்டீஸைப் பார்த்த அந்த ஏழை முதியவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஹபூர் நகரம் முழுவதும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் அனைத்தும், முதியவர் மட்டும் செலுத்தும் வகையில் பில் வந்துள்ளது.

ஹபூர் மாவட்டம், சாம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமிம்(வயது80). இவரின் மனைவி கைரு நிஷா. ஷமிம் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் சிறிய வீட்டில் இரு டியூப் லைட்டுகளும், சிறிய தொலைக்காட்சி, ஒரு மின்விசிறி மட்டுமே இருக்கிறது. மாதந்தோறும் அதிகபட்சமாக ரூ.700க்கு மேல் மின்கட்டணத்தை ஷமிம் செலுத்தியதில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் மின்கட்டணமாக ஷமிமுக்கு மாவட்ட மின்வாரியத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது. இந்த நோட்டீஸைப் பார்த்த ஷமிம் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால், ஷமிம் 2 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு ஷமிம் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். தவறுதலாக தனக்கு ரூ.128 கோடி மின்கட்டணம் வந்துள்ளது, தனக்கு அதிகபட்சமாக ரூ.700 க்கு மேல் கட்டணம் வராது, ஆதலால் திருத்திக்கொடுங்கள் என்று ஷமிம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஷமிமின் வேண்டுகோளே நிராகரித்த அதிகாரிகள், மின் கட்டண ரசீதில் எந்த விதமான குழப்பமும் இல்லை, கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்துள்ளனர். இதனால், முதியவர் ஷமிம் வேதனையில் ஆழ்ந்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் முதியவர் ஷமிம் கூறுகையில், " நானும் எனது மனைவி மட்டுமே வீ்ட்டில் வசிக்கிறோம். வீ்ட்டில் மின்விளக்கு, மின்விசிறி, சிறிய தொலைக்காட்சி தவிர வேறு ஏதும் இல்லை. அதிகபட்சமாக 700 ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் வராது. ஆனால், கடந்த மாதம் ரூ.128 கோடி மின்கட்டணம் செலுத்தக் கூறியுள்ளார்கள்.

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று கூறி, அதிகாரிகளிடம் முறையிட்டபோது, என்னுடைய கோரிக்கையை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. கட்டணத்தை செலுத்துமாறு கூறிவிட்டனர். இவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கு செல்வது. யாரிடம் இதற்கு மேல் முறையிடுவது எனத் தெரியவில்லை. மின் கட்டணத்தை செலுத்தாததால், மின்இணைப்பை துண்டித்துவிட்டனர். ஹபூர் நகரம் முழுவதும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் முழுவதையும் நான் செலுத்துவது இயலாத காரியம் " எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து லக்னோ மின்வாரியஅதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்டபோது,  அவர்கள் இந்த விவகாரம் இப்போதுதான் தங்களுக்கு தெரியவந்தது என்றும், தொழில்நுட்ப கோளாறுகள் ஏதேனும் நடந்திருந்தால் விரைவில் சரிசெய்யப்பட்டு முறையான மின் கட்டண ரசீது அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT