ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் கடந்த சில மாதங்களாக பலரிடம் முருங்கைக் காய் மற்றும் அதன் கீரைகளை சமைத்து உண்ணுமாறு கூறி வரு கிறார். இதை தனது அரசு அதிகாரிகளின் கூட்டங்களிலும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
இதன் பின்னணியில் முருங்கை காய் மற்றும் அதன் கீரை குழந்தைகளுக்கான அதிக ஊட்டச்சத்தை அளிப்பது காரண மாக உள்ளது. உ.பி.யில் ஊட்டச் சத்து குறைவான குழந்தைகள் அதிகம் இருப்பதாக அம்மாநில அரசின் மருத்துவ புள்ளிவிவரங் களில் பதிவாகி வருகின்றன. இதை ஈடுகட்டும் வகையில், முருங்கை மரத்தின் பலன் அதிக உதவியாக இருக்கும் என முதல் வர் யோகிக்கு சொல்லப் பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, அவர் தாம் செல்லும் அரசு விழாக்களில் முருங்கையின் பலனை தவறாமல் கூறி வருகிறார். அத்துடன், அவ் விழாவில் பொதுமக்களுக்கு முருங்கை மரக்கன்றுகளை இலவச மாக அளித்து வருகிறார். இவர் எம்.பி.யாக இருந்த தொகுதியான கோரக்பூரில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கோரக்பூரின் மாவட்ட ஆட்சியரும், தமிழருமான கே.விஜயேந்திர பாண்டியன் கூறும்போது, ‘முதல்வர் கலந்து கொள்ளும் மரம்நடும் விழாக்களில் முருங்கையையும் அளிப்பதுடன் அதன் பலன்களைத் தவறாமல் எடுத்துரைக்கிறார். இதை உயிர் காக்கும் ஒன்றாகக் கூறப்படும் கல்பவிருட்சம் என முதல்வர் கூறி வருகிறார்.
ஆப்பிரிக்காவில் அதிகப் பிரச் சனையாக ஊட்டச்சத்து குறைவு இருந்த போது அந்நாட்டினர் முருங்கைக் கீரைகளால் பல னடைந்ததாகவும் அவர் கூறுவதால் உ.பி.யில் முருங்கை மரம் முக்கிய மானதாகி வருகிறது’ எனத் தெரிவித்தார்.
இந்த வருடம் ஒரு கோடி மரங் களை கோரக்பூரில் நட முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார். இதில் முருங்கை மரங்கள் அதிகமாக இருக்கவும் ஆட்சியர் விஜயேந்திரபாண்டியனுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அதிக எண்ணிக்கையில் முருங்கை மரக்கன்றுகளை சேர்க்கும் பணி யில் அதிகாரிகள் இறங்கி உள்ள னர். மேலும், மூலிகைச் செடி களுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் யோகி, அவற்றை நெடுஞ்சாலைகளின் நடுவில் உள்ள ‘மீடியன்’களில் நடவும் உத்தரவிட்டுள்ளார்.
வட மாநிலங்களில் ‘சஹஜன்’ என்றழைக்கப்படும் முருங்கை மரம் ஒரு வேண்டத்தகாத மரமாக கருதப்படுகிறது. ஆங்காங்கே பல இடங்களில் தானாகவே வளரும் இந்த மரத்தின் காயும், கீரையையும் ஆடு, மாடு களுக்கு மட்டும் அதிகம் வழங்கப் பட்டு வருகிறது.
டெல்லி, பிஹார், உ.பி.க்கு இடம்பெயரும் தமிழர்கள் அதன் பலனை அறிந்திருப்பதால் அதிகம் பயன்படுத்துகின்றனர்.