தேர்தல் பிரச்சாரத்தில் மத ரீதியான அணுகுமுறை தவறானது, எனவே பாஜகவின் 'ஹர ஹர மோடி' கோஷத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
வாரணாசியில் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி ஈடுபட்டபோது, அவரது மேடைக்குப் பின்னால் சிவன் பேனர் வைக்கப்பட்டிருந்ததாகவும், இதுவும் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது எனவும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே 'ஹர ஹர மோடி' கோஷம் தொடர்பாக துவாரகை பீடம் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமிகள்: “இந்த விவகாரம் குறித்து தெரிய வந்ததும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை தொடர்பு கொண்டு எனது எதிர்ப்பைத் தெரிவித்தேன். இது போன்று கோஷமிடுவது இறைவன் சிவனை அவமதிப்பது போலாகும். கடவுளை துதிப்பதற்கு பதிலாக தனிமனிதரை துதிப்பது இந்து மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று கூறியிருந்தார்.
அது தவிர, இந்து மதத்தில் சிவனை துதிக்கும் வகையில் ‘ஹர ஹர சங்கரா‘ என்று கூறுவதைப் போல, மோடியை பாராட்டும் வகையில் ‘ஹர ஹர மோடி’ என்று கூறுவது மத உணர்வை புண்படுத்துவதாக மனோஜ் துபே என்ற வழக்கறிஞர் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.