உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைக் காணாமல் திரும்பமாட்டேன் என்று காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி இதற்காக சிறையில் இருக்கத் தயார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் சோனாபத்ரா கலவரத்தில் உயிரிழந்தவர் குடும்பம்பத்தினரைக் காண செல்ல முயன்றபோது போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
உ.பி.யில் பழங்குடிகளின் நிலத்தை கையகப்படுத்துவதற்காக சோனாபத்ராவில் நடந்த கலவரம் நாட்டையே உலுக்கியுள்ளது. பழங்குடி மக்களின் நிலத்தை வாங்கிய கிராமத் தலைவர் அம்மக்களை அகற்றுவதற்காக தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.
கிராம தலைவரின் ஆதரவாளர்கள் தங்கள் நிலத்திலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்த பழங்குடியினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கடும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் படுகாயமுற்றனர்.
காயமடைந்தவர்கள் வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்றபோது நாராயண்பூரிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா, நேற்றிரவு சூனார் விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.
பிரியங்கா தங்கிருந்த அறைக்கு வெளியே கடும் பாதுகாப்புடன் போலீஸார் இரவு முழுவதும் காண்காணித்து வந்தனர். காங்கிரஸ் தொண்டர்களும் சிறிது இடைவெளிவிட்டு தரையில் படுத்துறங்கினர்.
பிரியங்காவுடன் தர்ணாவில் உடன் அமர்ந்திருந்த காங்கிரஸ் தொண்டர்களே அவருடன் தற்போது உடன் இருந்து வருகின்றனர். சோனாபத்ரா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களைக் காண இறுதிவரை அவருடன் போராட தயாராக உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவர்கள்.
விருந்தினர் இல்லத்தில் மின்தடை
மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் பிரியங்காவை சந்தித்து, விருந்தினர் இல்லத்தில் குளிர்சாதன வசதி இல்லை என்பதை தெரிவித்ததோடு அவரை வாரணாசிக்கு திருப்பி அனுப்பிவைக்க முயன்றனர். எனினும் தான் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை பார்க்காமல் திரும்பமாட்டேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பிரியங்கா தங்கியிருந்த விருந்தினர் இல்லத்தில் இரவு 10 மணிவரை மின்தடையும் ஏற்பட்டது. இரவு தாமதமாக, காங்கிரஸ் தொண்டர்கள் தங்களுக்குள் பணம் வசூலித்து ஒரு ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்துவந்து அங்கு தொடர்ந்து மின்சார வசதிக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி ஒரு ட்விட்டர் பதிவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
உத்தரப் பிரதேச அரசு கூடுதல் காவல்துறை தலைவர் பிரிஜ் பூஷண், வாரணாசி ஆணையர் தீபக் அகர்வால், ஆணையர் மிர்ஸாபூர் ஆகியோரை அனுப்பிவைத்திருந்தது. மிர்ஸாபூர் காவல்துறை தலைவர், என்னிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காமல் அங்கிருந்து புறப்படும்படி கேட்டுக்கொண்டார்.
தர்ணாவின்போது கடைசி ஒரு மணிநேரம்வரை காவல்துறையைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் உடன் அமர்ந்திருந்தனர். ஆனால் என்னை கைது செய்வதற்கான எந்தவித ஆதாரங்களையோ அல்லது எந்தவித ஆவணங்களையோ அவர்கள் கொண்டுவரவில்லை.
இவ்வாறு பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இது மட்டுமின்றி இன்னொரு பதிவில் பிரியங்கா, ''ஜூலை 17 அன்று சோனாபத்ராவில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திப்பதற்காக அரசாங்கம் என்னை சிறையில் வைக்க விரும்பினாலும் அதற்கும் தயாராகத்தான் வந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைக் காணாமல் அங்கிருந்து திரும்பப்போவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல் துறை அதிகாரிகளுடன் பேசிய பிரியங்கா காந்தி ''ஜாமீன் தொகையை நான் வழங்க மாட்டேன்; நான் ஒரு பைசா கூட செலுத்த மாட்டேன். சோனாபத்ராவில் 144 தடை விதிக்கப்பட்டால் நான் அதை மீற மாட்டேன், 2 பேர் செல்வார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 7 மணி நேரமாக நான் இங்கு வைக்கப்பட்டுள்ளேன். அவர்களைச் சந்திக்காமல் நான் செல்லமாட்டேன்'' என்று தெரிவித்தார்.